MK Stalin : டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணை வரலாற்றில் திட்டமிட்ட தேதியில் இதுவரை 17 முறைகள் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது 18ஆவது முறையாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

  • Share this:
    மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதலில் குறுவை சாகுபடியும், தொடர்ந்து சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியும் செய்யப்படுவது வழக்கம்.

    மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே, அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், அணையின் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கால்வாயில் பாய்ந்து வந்த தண்ணீரை மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கி வரவேற்றார்.

    இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1, 170 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டம் பாசூர் வரை காவிரி ஆற்றில் 7 கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே கதவணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

    மேட்டூர் அணை வரலாற்றில் திட்டமிட்ட தேதியில் இதுவரை 17 முறைகள் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது 18ஆவது முறையாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பு 10 முறையும், ஜூன் 12ஆம் தேதிக்கு பிறகு 60 முறையும் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    Must Read : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

    வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக இன்று திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படவுள்ளது. அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மதிவேந்தன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
    Published by:Suresh V
    First published: