HOME»NEWS»TAMIL-NADU»chief minister edappadi palanisamy to be inaugurated jayalalithaas memorial sur

ஜெயலலிதா நினைவிடத்தை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றர்.

ஜெயலலிதா நினைவிடத்தை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா நினைவிடம்
  • Share this:

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை 11 மணியளவில் திறந்துவைக்கிறார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, இதற்கான நிதியை ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, கட்டுமானப்பணியை 2018ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந்நிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்துள்ளது.

50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், 57.8 கோடி ரூபாய் மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.



ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க... பேரணி.. கண்ணீர் புகை குண்டு.. தடியடி.. 144 தடை... தலைநகரை திணறடித்த விவசாயிகள் போராட்டம்

மேலும், 12 கோடி ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் முறையிலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் நினைவிடத்தைச் சுற்றி 9 ஏக்கர் பரப்பளவிலான இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நினைவிடத்தைப் பராமரிக்க பொதுப்பணித்துறைக்கு அரசு 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்பட இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றர்.
Published by:Suresh V
First published: