தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தனது 6வது கட்ட பரப்புரையைத் தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவருக்கு, ஒயிலாட்டம், செண்டை மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தின்போது உரையாற்றிய அவர், திமுக நாட்டு மக்களை மறந்துவிட்டதாலேயே, மக்கள் திமுகவை மறந்துவிட்டதாக தெரிவித்தார். விவசாயிகளை பாதுகாக்கவும், விவசாயம் வளரவும் தமிழக அரசு பாடுபட்டு வருவதாகவும் கூறினார். வறட்சி மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வருங்காலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் எனவும், தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதன் காரணமாக இந்த பருவ மழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளதாகவும் கூறினார். ஆழ்வார் திருநகரி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கப்படுவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அடுத்த முறையும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சேமிக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து ஸ்டாலின் மனுக்கள் வாங்குவதை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி, மக்களை ஏமாற்றி ஸ்டாலின் நாடகம் ஆடுவது செல்லுபடியாகாது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருச்செந்தூரில் நடைபெற்ற அதிமுக மகளிர் அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்ற முதலமைச்சர், மகளிர் மேம்பாட்டிற்காக அதிமுக செயல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக நிறைவேற்றி உள்ளதாகவும், தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை திமுக மறந்து விடும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.