திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் 6 இடங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுமார் 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது, டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவாக திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தி இருக்கிறோம். 3 விவசாயிகள் விரோதச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் திமுக கடுமையாக எதிர்த்து இருக்கிறது. அவற்றை எதிராக வாக்களித்து இருக்கிறது.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும். சேலம் போராட்டத்தில் நானே பங்கேற்றேன். அதில் 25,000 பேர் பங்கேற்றுள்ளனர். திமுக தொண்டர்களைக் கைது செய்துள்ளது இந்த அரசு என்றார்.
கடலூர், விழுப்பிரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்தேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் திமுக சார்பில் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளைச் சந்தித்து வெள்ள நீரை அகற்றக் கோரிக்கை வைத்தோம். குடிமராமத்துப் பணியில் பெரிய சாதனை செய்துவிட்டோம் என முதல்வர் பேசுகிறார்; அதன் மூலம் கமிஷன் பெறுகிற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. அதிமுக அரசின் ஊழல்களை நாங்கள் ஆதாரத்துடன் கூட்டங்களில் சொல்வதை முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
Also read: ’மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட அரசு பேச்சுவார்த்தை நடத்தும்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ..
மேலும் கூறுகையில், ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகளை அறிக்கை மூலம் சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் வேலை. அவர் எனக்கு ’அறிக்கை நாயகன்’ என்று பட்டம் சூட்டியுள்ளார். பெருந்தன்மையுடன் அதை ஏற்றுகொள்கிறேன். அதேபோல் நான் முதல்வருக்கு ’ஊழல் நாயகன்’ என்கிற பட்டத்தை சூட்டுகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், ரஜினி கட்சி தொடங்கட்டும், கொள்கைகளை அறிவிக்கட்டும் அதன் பிறகு என் கருத்தைத் தெரிவிக்கிறேன். தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக் கொண்டோம் என ரஜினி வருத்தப்பட்டதாக எனக்கு தகவல் வருகிறது என்று குறிப்பிட்டார். மேலும், ராசா விவாதத்துக்கு அழைத்தும் முதல்வர் விவாதத்துக்கு இதுவரை வரவில்லை, எனவே முதல்வர் ஆண்மையற்றவர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் கோமாளி என்று மு.க. ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.