தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு முன்பு இதேபோன்றதொரு சந்திப்பு டெல்லியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் இடம்பெற்றவர்கள் பிரதமர் இந்திரா காந்தியும் முதலமைச்சர் கருணாநிதியும். இந்த இரண்டு சந்திப்புகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் சுவாரஸ்யமானவை. வேற்றுமைகள் வியப்புக்குரியவை.
அண்ணா மறைந்தபிறகு முதலமைச்சராகப் பொறுபேற்ற மு.கருணாநிதி சுமார் ஒருமாதம் கழித்தே டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்று சுமார் ஒருமாதம் கழித்தே டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அப்போது முதலமைச்சர் கருணாநிதியுடன் சென்றவர் தொழில்துறை அமைச்சர் மாதவன். ஆனால் இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்றவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அன்று பிரதமர் இந்திரா காந்தியுடன் சுமார் நாற்பது நிமிடங்கள் பேசினார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. இன்று பிரதமர் மோடியுடன் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் பேசினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உற்சாகமூட்டும் அளவுக்கு பிரதமர் இந்திரா காந்தியின் வரவேற்பு இருந்ததாகச் சொன்னார் கருணாநிதி. பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருந்தது என்று கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மத்திய அரசின் ஒத்துழைப்பு மாநில அரசுக்குத் தாராளமாக இருக்குமென்று பிரதமர் இந்திரா காந்தி கூறியதாகச் சொன்னார் கருணாநிதி. அதேபோல, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்” என்று பிரதமர் மோடி சொன்னதாகக் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
Must Read : மோடி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு; நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை குறித்து கோரிக்கை
மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமா என்ற கேள்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டெல்லி செய்தியாளர்கள் எழுப்பினர். இதே கேள்வியை 52 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் எழுப்பியபோது அவர் சொன்ன பதில், “என்னைப் பற்றி பிரதமர் இந்திரா காந்தி அச்சவுணர்வோ அல்லது ஐயப்பாடோ கொண்டதாகக் கேள்விப்பட்டேன். மத்திய அரசுடன் தகராறு செய்வது எங்கள் நோக்கமல்ல. ஆனால் ஒன்றை நான் தெளிவாகச் சொல்வேன், உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்!”. என்பதுதான்.
அப்போது கருணாநிதி சொன்ன அதே பதிலைத்தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார். என்ன ஒன்று, மத்திய அரசு என்று அப்போது சொன்னார் கருணாநிதி. அதையே ஒன்றிய அரசு என்கிறார் மு.க.ஸ்டாலின்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM delhi visit, DMK Karunanidhi, MK Stalin, Narendra Modi