அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாக அககட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர் ஜே.எம்.பஷீர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த ஜே.எம்.பஷீர் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளனர்.
இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜே.எம்.பஷீர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்.
எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.