புலம்பெயர்ந்த மக்களுக்கான ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த செயல் விளக்க கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைமைக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். குறிப்பாக, அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கூட்டத்தில் பங்கேற்குமாறு குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தால் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது- அண்மையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக சட்ட ஆணைய தலைவர் அனுப்பிய கடிதத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டிருந்தார். இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதிமுக இரட்டைத் தலைமையை குறிப்பிட்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் முறைப்படி, தனக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் தேவையின்றி சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சாடினார்.
அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்பதை, மத்திய சட்ட ஆணையம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அங்கீகரித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எனவே, மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.