தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரிவான ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரிவான ஆலோசனை

சுனில் அரோரா

ஏப்ரல் மாதம் கடைசி வாரம் அல்லது மே 2ஆவது வாரத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு 4 தேதிகளை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 • Share this:
  தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார். அவருடன் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஷேபாலி, பி.சரண், பொதுச்செயலாளர் உமேஷ்சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திரபூ‌ஷண் குமார், இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய்மாலிக் ஆகியோரும் உடன் வந்தனர்.

  சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள இவர்கள் நேற்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சி பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

  கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி அளித்தார்

  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. தேர்தலை எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் கமி‌ஷனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் அல்லது மே 2ஆவது வாரத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு 4 தேதிகளை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை? அங்கு கூடுதலாக என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எத்தனை துணை ராணுவ படையினர் தேவை என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

  இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று 2ஆவது நாளாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளை அழைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடைபெறும் பணபரிவர்த்தனை குறித்து பட்டியல் எடுத்து அதை வருமான வரித்துறையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒரே நாளில் அதிகமாக பணம் எடுக்கும் நபர்கள் பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

  பின்னர், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர், உளவு பிரிவு ஐ.ஜி., கடலோர காவல் படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அதன் பின்னர், அவர் புதுச்சேரி மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.
  Published by:Suresh V
  First published: