தென் இந்தியாவில் இருக்கும் மிகவும் பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். பஞ்சபூத தலங்களில், ஆகாய தலமாக விளங்கும் இந்த கோயிலில் அருள் பாலிக்கிறார் ஆடல்வல்லான் நடராஜர். கட்டிடக் கலைக்கும், ஆன்மீகத்திற்கும் இடையிலான தொடர்பை பிரதிபலிக்கும் இந்த கோயில் கட்டப்பட்டது பத்தாம் நூற்றாண்டில். சிதம்பரம் நடராஜரை குலதெய்வமாக கருதிய சோழர்கள் கட்டியதே இந்த கோயில்.
நான்கு ராஜகோபுரங்கள், பொன் தகடுகளால் வேயப்பட்ட கருவறைக் கூரையுடன் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இந்த ஆலயம். 72 ஆயிரம் நரம்புகளால் கட்டமைக்கப்பட்ட மனிதன், நாளொன்றுக்கு 21 ஆயிரத்து 600 முறை சுவாசிக்கிறான். அதை குறிக்கும் வகையில் 21 ஆயிரத்து 600 பொன் தகடுகள், 72 ஆயிரம் ஆணிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது அந்த கூரை. கனகசபை, சித்த சபை, நிருட்டா சபை, தேவ சபை, ராஜசா என ஐந்து சபைகள் கொண்ட இந்த ஆலயத்தில், சர்ச்சைகள் அடிக்கடி சம்மணம் போட்டுக் கொள்ளும்.
தேவாரம், திருவாசகம் ஏடுகளை பூட்டி வைத்துக் கொண்டு தர மறுத்தார்கள் தீட்சிதர்கள். கோயிலுக்குள் நுழைய நந்தனாருக்கு தடை, ஆறுமுகசாமியை தேவாரம் பாடவிடாமல் தடை என தடைகள் ஏராளம். திருமுறை பாடவும் தடை விதித்தார்கள் இந்த தீட்சிதர்கள். பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தீட்சிதர்கள் அனுமதியுடன் திருமுறை ஓத ஆரம்பிக்கப்பட்டது 2014ஆம் ஆண்டு. நாள்தோறும் திருமுறைகள் ஓதப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளிலேயே அதை முடக்கினார்கள் தீட்சிதர்கள்.
Also Read :வாயை கட்டி போராட்டம்.. மூக்கையும் சேர்த்து மூட வேண்டியது தானே - காங்கிரஸை சீண்டிய சீமான்
நடராஜர் கோயிலுக்குள் திருமுறை பாடுவதற்கு, தீட்சிதர்கள் தினமும் 5 ஆயிரம் கேட்டார்கள் என்பதே குற்றச்சாட்டு. தீட்சிதர்கள் அதை மறுத்தாலும், அதன்பிறகு இன்றுவரை தொடங்கப்படவில்லை திருமுறை ஓதும் நிகழ்வு. நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் லிங்கத்தையே சிறப்பு தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். சிதம்பரம் கோயிலில் மட்டுமே பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தருகிறார் நடராஜர். ஆனந்த நடனமாடும் அவரை, கனகசபை மண்டபத்தில் ஏறி, பக்தர்கள் தரிசிப்பது நடைமுறை.
பொன்னம்பலம் என்ற தமிழ்ச் சொல்லின் சமஸ்கிருத உச்சரிப்பே கனகசபை. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு அனைத்து ஆலயங்களிலும் மீண்டும் அமலாகியுள்ளன பழைய வழிபாட்டு முறைகள். ஆனால், சிதம்பரம் கோயிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி தரிசனம் செய்ய தடை விதித்தார்கள் தீட்சிதர்கள். ஆரம்பத்திலேயே அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர், அக்கோயிலுக்கு அடிக்கடி வரும் பக்தர்கள்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனகசபை மீதேறிய பெண் பக்தரை தாக்க முற்பட்டனர் தீட்சிதர்கள். அதைத் தொடர்ந்து, ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், ஆகம விதிகளை பின்பற்றி, கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், ஆலோசனைகளுக்குப் பிறகே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் தீட்சிதர்களை வழிக்கு கொண்டுவர, நடராஜர் கோயிலை, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.