வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை எம்.கே.பி.நகரைச் சேர்ந்த சார்லஸ் ராஜ்குமார் என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவருக்கும் 2019 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 17 பவுன் தங்க நகை உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கிய போதும், கூடுதல் பணம், வீடு கேட்டு, ராஜ்குமார், ரமணியை சித்ரவதை செய்து வந்துள்ளார். அத்துடன், ரமணியின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டுள்ளார்.
இதனால், தாய் வீட்டில் வசித்து வந்த ரமணியை, 2020ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி எம்.கே.பி. நகர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற ராஜ்குமார், அங்கு அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினார். இதுசம்பந்தமாக ரமணியின் தந்தை மற்றும் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
Also read... குடித்து ஜாலியாக இருக்க மோட்டார் சைக்கிள்களை திருடும் மருத்துவ உதவியாளர்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்
இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் ராஜ்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையில் ரமணியின் தாய் – தந்தைக்கு தலா 7,500 ரூபாயை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அவர்களுக்கு பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிதியில் இருந்து நிவாரணம் பெற்று கொடுக்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கும் பரிந்துரைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.