ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பைலட் கனவிற்காக அமெரிக்க வேலையை உதறிய மஹிமா: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி கதை

பைலட் கனவிற்காக அமெரிக்க வேலையை உதறிய மஹிமா: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி கதை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மஹிமா

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மஹிமா

இந்தியா வந்து கமர்ஷியல் பைலட் பயிற்சித் தகுதி தேர்வை வெற்றிகரமாக முடித்த மஹிமா கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹைதரபாத்தில் உள்ள ஃப்ளைடெக் ஏவியேஷன் ட்ரைனிங் ஸ்கூலில் சேர்ந்து விமான ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தெலங்கானாவில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த பயிற்சி ஓட்டுநரான மஹிமாவின் உடல் இன்று காலை எரியூட்டப்பட்டது. அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வந்த மஹிமா விமான பைலட் ஆக வேண்டும் என்ற கனவில் வேலையை உதறினார். எனினும், தனது லட்சியத்தை அடையாமலேயே மஹிமா மரணமடைந்துவிட்டதாக அவரது உறவினர்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில்,  ஐதராபாத்தில் உள்ள ஃப்ளைடெக் ஏவியேஷன் ட்ரைனிங் அகாடமிக்கு சொந்தமான ஒரு விமான பயிற்சிப் பள்ளி உள்ளது. இங்கிருந்து ஹெலிகாப்டரில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி சென்னையை சேர்ந்த மஹிமா என்ற பயிற்சி மாணவி உயிரிழந்தார்.

சேலக்குருத்தி, துங்கதுருத்தி கிராம எல்லைகளுக்கு இடையேயுள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்தில் உயிரிழந்த 28 வயது கொண்ட மஹிமாவின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான சென்னை அயனாவரத்தில் எரியூட்டப்பட்டது.

சென்னை அயனாவரத்தைப் பூர்வீகமாக கொண்ட கஜராஜ் மற்றும் அவரது மனைவிக்கு ஒரே பிள்ளையான மஹிமா,  பி.டெக் கோல்டு மெடலிஸ்ட் ஆவார்.  தனது உயர்படிப்பை அமெரிக்காவில் முடித்து அங்கேயே மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். தனது சிறு வயது முதல் கமர்சியல் பைலட் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட மஹிமாவுக்கு கடந்த 2018 ம் ஆண்டு ஹைதராபாத்தை சேர்ந்த வையாபுரி என்பவருடன் திருமணமாகியுள்ளது.

கணவர் வையாபுரி நியூசிலாந்தில் பணியாற்றிக்கொண்டே பி.பி.எல் ( Private Pilot Licence) பெற்று விமான பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால் மஹிமாவும் அமெரிக்க வேலையை உதறி தள்ளிவிட்டு தனது கணவருடன் சேர்ந்து நியூசிலாந்தில் விமான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர் இந்தியா வந்து கமர்ஷியல் பைலட் பயிற்சித் தகுதி தேர்வை வெற்றிகரமாக முடித்த மஹிமா கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹைதரபாத்தில் உள்ள ஃப்ளைடெக் ஏவியேஷன் ட்ரைனிங் ஸ்கூலில் சேர்ந்து விமான ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க: போர் வரும் என நினைக்கவில்லை: தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவி பேட்டி

நடுத்தர குடும்பத்தில் பிறந்த மஹிமா தனது தேவைகளை சிறு வயது முதல் தானே நிறைவேற்றி வந்துள்ளார் என்பதும் இவரது தந்தை கஜராஜ் கொரொனா தொற்றில் பாதிக்கப்பட்டு 9 மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.  தனது மனைவி கமர்சியல் பைலட் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார் என்றும், அதற்காக அவரது பாதையில் விடாமுயற்சியுடன் பயணித்து வந்தார் எனவும் தெரிவித்த மகிமாவின் கணவர் வையாபுரி,  அதற்குள் இதுபோன்ற ஒரு துயரமான சம்பவம் நடந்துவிட்டதாக கூறி கதறி அழுதார்.

மேலும் படிக்க: போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தகராறு- அடிதடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்

மகிமா விமானத்தை நன்கு இயக்கும் திறன் கொண்டவர் எனக்கூறிய உறவினர்கள், நேற்று நடந்த விபத்தானது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தான் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் எனவும், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்க முடியும் எனவும் இந்த விபத்தின் உண்மை தன்மை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Published by:Murugesh M
First published:

Tags: Helicopter Crash, Woman