சிக்னல் இல்லாத நிலையிலும் பெண்ணுக்கு கைகொடுத்த ’காவலன்’ செயலி...!

சிக்னல் இல்லாத நிலையிலும் பெண்ணுக்கு கைகொடுத்த ’காவலன்’ செயலி...!
  • News18
  • Last Updated: February 6, 2020, 1:06 PM IST
  • Share this:
மல்லிகா எனும் தொழில்நுட்ப வல்லுநர் நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் கழிவறையில் சிக்கித் தவித்தபோது அவருக்குக் கைகொடுத்திருக்கிறது தமிழக போலீசாரின் காவலன் செயலி.

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக போலீசார் காவலன் என்ற பெயரில் ஒரு செயலியை வெளியிட்டிருந்தனர்.

இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், செயலியில் உள்ள SOS எனும் பொத்தானை அழுத்தினால் போதும், அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும். அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை ரோந்து வாகனம் அந்த பெண் உள்ள இடத்திற்கு வந்து நிற்கும்.


இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த நிலையில், செல்போனில் சிக்னல் இல்லாமல் தவித்த பெண் ஒருவர் காவலன் செயலி மூலம் மீண்டுள்ளார்.

நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் கழிவறையின் கதவு திறக்காததால் அதனுள்ளே சிக்கியிருக்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் மல்லுகா. அங்கு சுமார் 20 நிமிடங்கள் மாட்டிக்கொண்ட அவர், அந்த ஹோட்டல் ஊழியர்களைத் தொடர்புகொள்ள இயலாமல் சிரமப்பட்டிருக்கிறார். தன்னுடைய செல் ஃபோன் சிக்னலும் அவருக்குக் கிடைக்காததால் அவரால் யாரையும் அழைக்க முடியாமல் இருந்திருக்கிறது.

சட்டென அவருக்கு காவலன் செயலி நினைவுக்கு வரவே, அந்த செயலியின் சிவப்பு பொத்தானை அழுத்தி காவல்துறைக்குத் தகவலளித்துள்ளார். அடுத்த 2 நிமிடங்களில் அங்கு வந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.இது குறித்து மல்லிகா கூறுகையில், ”அப்போது காலை 11 மணி. நான் இருந்தது ஒரு சிறிய அறை. சிறிது நேரம் பதற்றப்படாமல் இருக்க முயன்றேன். ஆனால், கதவின் தாழ்பாளில் ஏதோ பிரச்னை எனத் தெரிந்ததும் பெரும் பயம் என்னைத் தொற்றிக்கொண்டது” என்று கூறுகிறார் மல்லிகா.

மேலும் அவர், “நான் உதவி கேட்டு சப்தமிட்டுப் பார்த்தேன்; ஆனால், அந்தக் கழிவறை ஹோட்டலின் ஒரு தனித்த பகுதியில் இருப்பதால் என் குரலை ஹோட்டல் ஊழியர்கள் யாராலும் கேட்க முடியாது என்பது புரிந்தது. அப்போதுதான் எனக்கு காவலன் செயலியின் நினைவு வந்தது. SOS அம்சத்தைப் பயன்படுத்தினேன். உடனுக்குடன் காவல்துறை அதற்கான நடவடிக்கை எடுத்தது உள்ளபடியே ஆச்சரியமூட்டுகிறது” என்கிறார்.

நுங்கம்பாக்கம் காவல்துறை ஹோட்டலுக்கு வந்த பிறகே ஒரு பெண் இப்படி சிக்கிக் கொண்டிருப்பது ஹோட்டல் நிர்வாகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. சுமார் 10 நிமிடங்கள் கதவைத் திறக்க முயன்று பலனளிக்காததால், காவல்துறையினர் கதவை உடைத்து அவரை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் காவலன் செயலியைப் பயன்படுத்துவோர் பத்து லட்சத்துக்கும் மேல் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் சுமார் 1.60 லட்சம் பயனாளர்கள் இருப்பதாகவும் காவல்துறை தரும் தரவுகள் கூறுகின்றன.

Read: காவலன் செயலியை பயன்படுத்துவது எப்படி..?
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading