வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல இடங்களில் காலையில் மிதமான மழை பெய்தது. தியாகராய நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காலையில் பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஒரு சில தாழ்வான இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 மற்றும் 14-ஆம் தேதிகளில் மிக கனமழையோ, மிக மிக கனமழையோ பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, நிலைமையை சமாளிக்க மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக, தமிழகத்திற்கு 11, 13 மற்றும் 15ஆம் தேதிகளில் மஞ்சள் அலர்ட்டும், 12 மற்றும் தீபாவளி நாளான 14-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.
.Soorarai Pottru Review: சூர்யாவின் சூரரை போற்று ரிலீஸ்: படம் எப்படி இருக்கு?
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.