கோடைக் காலம் தொடங்கிவிட்டாலே சென்னைவாசிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பயம் தொற்றிக்கொள்வது இயல்பு. இந்த கோடை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தண்ணீர் தட்டுப்பாடு, சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போன ஒரு கடுமையான சொல். கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டன. ஐடி நிறுவனங்கள் தற்காலிகமாக பணிகளை நிறுத்தின. விடுதிகளில் தண்ணீர் இல்லாமல் அரைக் குடம் தண்ணீருக்காக மக்கள் தவம் கிடந்தனர்.
சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் சோழவரம், புழல், பூண்டி ஏரிகள் வறண்டதும், குறிப்பாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததுமே கடந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது.
வேலூரில் இருந்து தண்ணீரை சுமந்துவந்த ரயிலும், அதனை தொடர்ந்து கைகொடுத்த பருவமழைகளும் சென்னை மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தன. பருவமழை மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த கிருஷ்ணா நதி நீரால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,595 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதே ஏரியில் கடந்த ஆண்டு இந்த நாளில் 527 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருந்தது.
3,231 மில்லியன் கனஅடி கொண்ட பூண்டி ஏரியில், தற்போது 1,571 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே ஏரியில் 474 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு இருந்தது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், 1,964 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் வெரும் 23 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருந்தது.
இந்த ஆண்டு அளவுக்கு சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்காது எனக் கூறும் நீரியல் வல்லுநர்கள், கழிவுநீரை சுத்திகரித்து சேமித்து வைத்தால் எதிர்காலங்களிலும் தண்ணீர் பிரச்னை வராது என்கின்றனர். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மக்களின் பங்களிப்பும் இத்தருணத்தில் அவசியமானதாக உள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.