சென்னை வேளச்சேரியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 4 பெட்டிகளை, இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், குறிப்பிட்ட பகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வேளச்சேரி டான்சி நகர் பாகம் எண் 92-ல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குபெட்டிகளை வாக்கு எண்ணும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன. அப்போது, 2 வாக்குப்பெட்டிகள், ஒரு விவிபேட் இயந்திரம் உள்ளிட்ட 4 பெட்டிகளை, இருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். இதைகண்ட அவ்வழியாக வந்த உணவு டெலிவரி பாய் ஒருவர், வாக்குப்பெட்டி தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். முறைப்படி அரசு வாகனத்தில் ஏன் வாக்குப்பெட்டி கொண்டு செல்லவில்லை என கேட்டு,இருவரையும் சிறைபிடித்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வாக்குப்பெட்டியை கொண்டு சென்றவர்கள் , சென்னை மாநகராட்சியில் பணிபுரிவதாகவும், திருவான்மியூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பெட்டிகளை எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகி்யோரும் அங்கு கூடினர்.
இதனால், அந்த நபரை காவலர்கள் தங்கள் வாகனத்தில் ஏற்றியதால், ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அங்கிருந்தவர்கள் அவர்களை தாக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததும், அங்கிருந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. தகவலறிந்த திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாச்சேரி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகாரளித்தார்.
இதனிடையே, இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட வாக்கு பெட்டி DAC எனும் தனியார் பள்ளியில் பயன்படுத்தப்பட்டது என தெரிய வந்துள்ளது. 15 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் அந்த பெட்டி பழுதாகி விட்டதாகவும், அதையே மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. அதேசமயம், வாக்குப்பெட்டி ஏன் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான, காரணம் இதுவரை தெரியவில்லை.