உள்ளாட்சித்தேர்தல் - வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

உள்ளாட்சித்தேர்தல் - வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: December 16, 2019, 7:58 AM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை அதிமுக, திமுக இன்று காலை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் அடுத்த மாதம் 2ம் தேதி எண்ணப்படும். தேர்வாகும் நிர்வாகிகள் 6ம் தேதி பதவியேற்க உள்ளனர்

கடந்த 9ம் தேதி முதல் சனிக்கிழமை வரை பல்வேறு பதவிகளுக்கு ஒரு லட்சத்து 65,659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒரு லட்சத்து 15,814 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 35,464 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். 13,117 பேர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1264 பேர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. கடலூர், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஊராட்சி குழு உறுப்பினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள அதிமுக, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 34 கட்சி மாவட்டங்களில் போட்டியிடும், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு, திருச்சி வடக்கு மற்றும் தெற்கு, கரூர், சேலம் மத்திய மற்றும் மேற்கு மாவட்டம், கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு மற்றும் தெற்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட கட்சி மாவட்டங்களில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவும், தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை திமுக-வும், அதிமுக-வும் இதுவரை அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இரு கட்சிகளும், கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வேட்புமனுத் தாக்கலுக்கான அவகாசம், இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு, இன்று காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

சீர்காழி அருகே பழையார் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் ஒரு தரப்பிற்கு மட்டுமே மீன்பிடி அனுமதி வழங்குவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

விருத்தாசலம் அருகே விருத்தகிரிகுப்பத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், முதனை ஊராட்சியில் இருந்து விருத்தகிரிகுப்பத்தை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி ஏலம் விடப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also See...

உள்ளாட்சித் தேர்தல்: தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் பகுதிக்கு எப்போது வாக்குப் பதிவு


First published: December 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading