70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 6 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் - முதலமைச்சர்

70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 6 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் - முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: January 24, 2020, 9:05 AM IST
  • Share this:
தொழில்துறை கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் உருவாக்கி வருவதால், இந்தியாவிலேயே தொழில்துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்ட டி.எல்.எஃப் நிறுவனம், டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, சண்டிகர், சென்னை உள்ளிட்ட இடங்களில் கிளைகளை தொடங்கியுள்ளது. அதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் உதவியுடன், சென்னை தரமணியில் DLF Down town என்ற பெயரில், டைடல் பூங்கா போன்ற, வர்த்தக ரீதியிலான பணி அமைவிட செயல்திட்டத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட உள்ளது. நவீன தொழில்நுட்பத்திலான கட்டடங்கள், சாலைகள் என பல்வேறு வசதிகளோடு 27 ஏக்கர் பரப்பளவில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 6 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது.

இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டத்தில் 25 லட்சம் சதுர அடி பரப்பளவிலான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அந்த கட்டட மாதிரி வடிவத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.


நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 59 நிறுவனங்கள் வணிக உற்பத்தியை தொடங்கியிருப்பதாகக் கூறினார். தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர முறையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தொழில் துறையில் சிறந்து விளங்க அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பி.எஸ்-6 நவீன சுத்திகரிப்பு ஆலை தூத்துக்குடியில் துவங்க உள்ளதாகவும், இதன்மூலம் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், முதலீடுகள் செய்வதில் உள்ள பிரச்னைகளை களைந்து எளிதாக்குவதற்காக தனது அலுவலகத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்