விமர்சனம் செய்யுங்கள்; புத்தகத்தை படித்துவிட்டு கேள்வி கேளுங்கள் - டி.எம் கிருஷ்ணா

விமர்சனம் செய்யுங்கள்; புத்தகத்தை படித்துவிட்டு கேள்வி கேளுங்கள் - டி.எம் கிருஷ்ணா
  • Share this:
`செபாஸ்டியன் & சன்ஸ்' என்னும் தனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா, “நானும் சுயநலவாதிதான். நானும் குழப்பத்தில் இருப்பதால்தான் இதைப் பேசுகிறேன். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வழி எனக்குத் தெரியவில்லை. இந்தப் புத்தகம் பாகுபாடுகளைப் பற்றிப் பேசுகிறது. புத்தகத்தை விமர்சியுங்கள். ஆனால், படித்துவிட்டு கேள்வி எழுப்புங்கள்” என்றார்.

கர்நாடக இசைக்கலைஞரும், மகசேசே விருது பெற்றவருமான டி.எம்.கிருஷ்ணா எழுதிய `செபாஸ்டியன் & சன்ஸ்' நூல் சென்னையில் நேற்று, ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் கல்லூரி அரங்கில் வெளியிடப்பட்டது. காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி நூலை வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். தொல் திருமாவளவன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அரங்கில் வெளியிடப்படுவதாக இருந்தது இப்புத்தகம். ஆனால், திடீரென அனுமதி மறுத்து கலாஷேத்ரா வெளியிட்ட அறிக்கையில், ”கலாஷேத்ரா, அரசு நிறுவனமாக இருப்பதால் அரசியல், கலாசாரம், சமூகரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது. புத்தக மதிப்புரைகளைப் பார்க்கும்போது, சர்ச்சைக்குரிய விஷயங்கள் இப்புத்தகத்தில் இருப்பது தெரிகிறது. புத்தக வெளியீட்டு விழாவுக்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. அதனால், புத்தக வெளியீட்டு விழாவுக்காக கொடுக்கப்பட்ட அரங்கிற்கான அனுமதியை ரத்துசெய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று ஏசியன் கல்லூரியில் அதே தேதியில் வெளியீட்டு விழா நடந்தது.


மிருதங்கம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குறித்து நான்காண்டு ஆய்வை எழுதியிருக்கிறார் டி.எம் கிருஷ்ணா.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், `தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் எம்.பி, ”வர்ண அடிப்படையிலான சாதியப் பாகுபாடு இருக்கிறது என்பதை, யார் மறுத்தாலும், இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதில் இருந்தே அறிந்துகொள்ளலாம். உலகில் தோன்றிய முதல் தோல் இசைக்கருவி பறைதான். அதன் பரிணாம வளர்ச்சியாகவே தபேலா, மிருதங்கம் போன்றவை உருவாக்கப்பட்டன. எனினும் கோவிலுக்குள் பறைக்கு இடமில்லை” என்றார்.

காந்தியின் பேரனும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்மோகன் காந்தி பேசுகையில்,”சிலரின் சித்தாத்தங்களால் அம்பேத்கர், காந்தி, பெரியார் போன்ற தலைவர்களின் கொள்கைகளை விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது'' என்றார்.Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்