தண்ணீர் சூழ்ந்த சென்னை புறநகர்... நான்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!

தண்ணீர் சூழ்ந்த சென்னை புறநகர்... நான்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: December 4, 2019, 7:05 AM IST
  • Share this:
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை, சென்னையின் புறநகர் பகுதிகளை தண்ணீரில் மிதக்க வைத்தது. செம்மஞ்சேரி எழில்முகா நகர், ஜவஹர் நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முழங்கால் வரை தேங்கியிருக்கும் தண்ணீரால் அவசர தேவைக்காக கூட வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளே மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.

மூன்று நாட்களாக தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் யாரும் வராததால் குழந்தைக்கு பால்கூட வாங்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் தாய்மார்கள்.


வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி, மூல வைகை, சுருளியாறு மற்றும் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டிவிட்டது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 008 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், மதுரை வைகை ஆற்றின் கரையோரமாக வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் குளித்தல், மீன்பிடித்தல், செல்பி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் முகது அஸ்வாக் என்ற சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அஸ்வாக் உடலை இளைஞர்கள் மீட்டனர்.இதற்கிடையே, தென் மேற்கு வங்க கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நிலவுவதாகவும், இதனால் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை பொறுத்த வரையில் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடல் பகுதியில் சூறை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading