• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலம் ரயில் கொள்ளை: ரூ.2 கோடி தீ வைத்து எரிப்பு - கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

சேலம் ரயில் கொள்ளை: ரூ.2 கோடி தீ வைத்து எரிப்பு - கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

கொள்ளை நடந்த ரயில் (கோப்புப் படம்)

கொள்ளை நடந்த ரயில் (கோப்புப் படம்)

சென்னை-சேலம் இடையே கடந்த 2016-ம் ஆண்டில் ரயிலில் நடந்த கொள்ளை குறித்து ரயில் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை-சேலம் இடையே கடந்த 2016-ம் ஆண்டில் ரயிலில் நடந்த கொள்ளைக்கு ஒரு வாரத்துக்கு மேலாக நோட்டமிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். நேரமில்லாததால், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் மட்டுமே கொள்ளையடித்ததாகவும், இதில், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அவற்றை எரித்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சேலத்திலிருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 342 கோடி ரூபாய் பணம், ரயில் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    அப்போது, ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்ட கொள்ளையர்கள், 5 கோடியே 78 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோகர் சிங் உள்ளிட்ட 5 பேரை அண்மையில் கைது செய்தனர். இவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார், கொள்ளை நடந்த பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மோகர் சிங், மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது குடும்பத்தினர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

    கொலை வழக்கில் தேடப்பட்டதால், தென்இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மோகர் சிங், கடந்த 2016-ம் ஆண்டில் தமிழகத்துக்குள் வந்துள்ளார். தனது கும்பலுடன் சேர்ந்து விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள், ரயில்வே பாதைகள், பாலங்கள் அருகே தங்கியுள்ளனர். அப்போது, சேலத்தில் தங்கியிருந்த தனது கும்பலைச் சேர்ந்த ஒருவர் மூலமாக, ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

    இதனைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க இந்த கும்பல் திட்டமிட்டுள்ளனர். அதன்படி,  அயோத்தியாபட்டினம் மற்றும் விருத்தாச்சலம் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக பயணம் மேற்கொண்டு நோட்டமிட்டனர். சின்னசேலம், விருத்தாச்சலம் இடையே 45 நிமிடங்களுக்கும் மேலாக இடைவிடாமல் செல்வதை அறிந்த கும்பல், தங்களது கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற முடிவுசெய்தது.

    ரயில் கொள்ளைக்கான கோப்புப் படம்


    இதன்படி, சின்னசேலத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் ரயில் நின்றபோது, அதில் ஏறிய மோகர் சிங் உள்ளிட்ட 5 பேர், பணம் எடுத்துச் சென்ற பெட்டிக்கு மேலே சென்று, பேட்டரியால் இயங்கும் கட்டர் மற்றும் கையால் இயக்கப்படும் கட்டர் ஆகியவற்றை கொண்டு துளையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெட்டிக்குள் சென்று, அதிலிருந்து ரூபாய் நோட்டுகளை, 6 லுங்கிகளில் சுற்றி கட்டியுள்ளனர்.

    விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே வயலூர் மேம்பாலத்தில் வந்தபோது, அங்கு காத்திருந்த மகேஷ் பார்டி உள்ளிட்டோரிடம் பணத்தை வீசியுள்ளனர். மேலும், ரயிலிலிருந்து தப்பிச் சென்றனர். அதிக அளவில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தபோதும், நேரம் போதாததால், குறைவான பணத்தையே கொள்ளையடித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

    சொந்த ஊருக்கு திரும்பியபிறகு, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் பணத்தை பிரித்துக் கொண்டனர். ஆனால், சம்பவம் முடிந்து 3 மாதங்களில் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கொள்ளை பணத்தில் பெரும்பகுதியான 500 ரூபாய் நோட்டுகளை எரித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.



    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: