• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான தடை தொடரும் - உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான தடை தொடரும் - உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கோப்பு படம்

கோப்பு படம்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு நிலம் கையகப்படுத்தலுக்கானது மட்டுமே. திட்டத்துக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்துவதற்கான தடை என்னும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  மேலும், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அனுமதியைப் பெறவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக புதிய அரசாணையை வெளியிடுமாறும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு நிலம் கையகப்படுத்தலுக்கானது மட்டுமே. திட்டத்துக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

    கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

    எதிர்மனுதாரர் வழக்கறிஞர்கள், சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளாகவும், இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி எனவும் வாதிட்டனர்.

    மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று காலை வழங்கியுள்ள தீர்ப்பில், நிலம் கையகப்படுத்தலுக்கான சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: