தமிழ்நாடு மற்றும் புதுவையில் இயல்பைவிட 54% கூடுதலாக
மழை பதிவாகியுள்ளதாகவும்
சென்னையில் 77% இயல்பைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாகவும் இந்திய
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது, இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வட தமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்த அவர், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்றார்.
அதுமட்டுமல்லாமல் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறிய அவர் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரை 3 இடங்களில் அதி கன மழையும், 23 இடங்களில் மிக கன மழையும், 21 இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, நாளை வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அதேபோல தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அதேபோல வரும் 12 ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்த அவர், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 54 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை 77 சதவீதம் இயல்பைவிட கூடுதலாக பதிவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.