மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிகிச்சை மையம் சென்னை ராஜீவ் காந்தி மருந்துவமனையில் மீண்டும் தொடக்கம்

LGBT சமூகத்தினர்.. (Image: Talukdar David / Shutterstock.com)

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான பாலின மாற்று சிகிச்சை கிளினிக்  மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

  • Share this:
பிறக்கும்போது ஒரு பாலினத்தில் பிறந்து வளரும் தருணத்தில் மாற்று பாலினத்தை உணர்பவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைத் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான இலவச சிகிச்சை அளிப்பதற்கு சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது.

இந்த கிளினிக்கில் பாலினம் மாற விரும்பும் நபர்கள் அவர்களுக்கு தேவையான எல்லா மருத்துவச் சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் பல்வேறு துறை நிபுணர்களிடம் இருந்து ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பாலினம் மாற விரும்பும் நபருக்கு முதல் மூன்று மாதங்கள் வரை மன நல ஆலோசனை வழங்கப்படும். அதன் பின்னர் ஒன்பதாவது மாதத்தில் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்படும். திருநங்கைளுக்கு மார்பகங்கள் வளரவும், திருநம்பிகளுக்கு முகத்தில் முடி வளரவும் ஹார்மோன் வழங்கப்படும். மார்பகங்கள் அகற்றுதல், மார்பகங்கள் பொருத்துதல் இந்த கிளினிக் மூலம் பாதுகாப்பாக செய்துக் கொள்ள முடியும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட நபர் பாலினம் மாற வேண்டாம் என்று முடிவெடுத்தால் இந்த சிகிச்சைகளை நிறுத்தி மீண்டும் பழைய உருவம் பெற முடியும்.

மூன்றாம் பாலினத்தவர்களுககான சிகிச்சை மையம்


ஓராண்டு முடிவில் பாலினம் மாற வேண்டும் என்ற முடிவில் அந்த நபர் உறுதியாக இருந்து விருப்பம் தெரிவித்தால் அவருக்கு பிறப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சைக்கு பின்னர் பாலினத்தை மீண்டும் மாற்றிக் கொள்ள முடியாது. எனவே இதற்கு முன்னதாக ஓராண்டு காலம், தான் விரும்பும் பாலினத்தவர் உடுத்திக் கொள்ளும் ஆடைகளை அணிந்து, சமூகத்தில் பழகி அதன் பின்னர் அந்த நபர் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே பிறப்பு உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும் பாலினம் மாறிய பிறகு குரலை, காது மூக்கு தொண்டை நிபுணர் மூலம் மாற்றியமைக்க முடியும்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக இதுவரை 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்று பேருக்கு மார்பகங்கள் பொருத்தப்பட்டு ஒருவருக்கு மார்பகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், ’18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பாலினம் மாற விரும்பினால் நோட்டரி சட்ட விதிகள் படி நோட்டரி சான்றிதழ் பெற்று மருத்துவர்கள் பரிந்துரையோடு மாறிக் கொள்ளலாம். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து துறை சார் நிபுணர்களும் ஒரே இடத்தில் இங்கே உள்ளனர். கொரோனா காரணமாக இயங்காமல் இருந்த கிளினிக் தற்போது இயங்க தொடங்கியுள்ளது" என்றார்.

கிளினிக்கு வந்திருந்த தோழி அமைப்பை சேர்ந்த சவீதா, "ஊரடங்கு காலத்தில் அரசு கிளினிக் இல்லாததால் பலர் சிகிச்சை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்ற நபர்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டது. இன்று இந்த கிளினிக் மீண்டும் திறக்கப்பட்டது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்" என்றார்.

அரசு கிளினிக்குக்கு வந்திருந்த திருநம்பி அருண் கார்த்திக் கூறுகையில், ’திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இருக்கும் அளவுக்கு திருநம்பிகள் குறித்து இல்லை. மார்பகங்கள் அகற்றுதல், ஹார்மோன் சிகிச்சை போன்ற வசதிகள் இந்த கிளினிக்கில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இயங்காமல் இருந்த இந்த கிளினிக் உடனே செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருத்தம்:

ஆகஸ்ட் 6ம் தேதி வெளியான "ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மீண்டும் தொடங்கிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிகிச்சை மையம்" என்ற இந்த செய்தி கட்டுரையில் "ஆண்களுக்கு மார்பகங்கள் வளரவும், பெண்களுக்கு முகத்தில் முடி வளரவும் ஹார்மோன்கள் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வார்த்தை உபயோகம் தவறானது. ஒரு திருநங்கை அல்லது திருநம்பி உடலளவில் எந்த உறுப்புகளுடன் இருந்தாலும் அவர் எந்த பாலினமாக தன்னை இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ அந்த பாலினத்திலேயே அவரை குறிப்பிட வேண்டும். அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே இந்த செய்தி கட்டுரையில் ஆண் என்ற இடத்தில் 'திருநங்கை' என்றிருந்திருக்க வேண்டும். அதே போன்று பெண் என்ற இடத்தில் 'திருநம்பி' என்றிருந்திருக்க வேண்டும். இந்த பிழை யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பட்டதல்ல. எனவே, இதனால் யாரேனும் வேதனைப்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் கோருகிறோம்.
Published by:Karthick S
First published: