மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு... ஆய்வில் தகவல்

மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு... ஆய்வில் தகவல்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: October 9, 2019, 8:42 AM IST
  • Share this:
சென்னை மாநகரில் மழை பெய்துவருவதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், செப்டம்பரில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. கோடைகாலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள், காலிக் குடங்களுடன் தெருத் தெருவாக அலைந்தனர். குறிப்பாக, தலைநகர் சென்னையில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்தது.

இந்த நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓரளவு பெய்த மழையால், மக்களின் தண்ணீர் தேவை சற்று பூர்த்தியாகியுள்ளது.


மேலும், நிலத்தடி நீரை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம், கணிசமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்திய குடிநீர் வாரியம், கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பரில் நிலத்தடிநீர் மட்டம் கணிசமாக உயர்வு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, கோடம்பாக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 மீட்டரில் இருந்த நிலத்தடிநீர் மட்டம், தற்போது 7.39 மீட்டராக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டையில் 5.98 மீட்டராகவும், ராயபுரத்தில் 7.22 மீட்டராகவும், அண்ணாநகரில் 5.81 மீட்டர் அளவுக்கும் உயர்வு பெற்றுள்ளது.

குறிப்பாக திரு.வி.க., நகரில் 8.26 மீட்டரில் இருந்த நிலத்தடிநீர் மட்டம், தற்போது 5.74 அளவாக உயர்வு பெற்று நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. திருவொற்றியூரில் 4.53 மீட்டரும், சோழிங்கநல்லூரில் 4.52 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்துள்ளது.இதேபோல் தண்டையார் பேட்டை, மாதவரம், அம்பத்தூர், மணலி மற்றும் பெருங்குடி பகுதிகளிலும் நிலத்தடிநீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது பெய்யும் மழை நீரை அனைவரும் சேமித்து பூமிக்கடியில் செலுத்தினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பது சென்னை குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வின் மூலம் தெளிவாக தெரிகிறது.

Also watch

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading