சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவுமுதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் நீர் இருப்பது வேகமாக உயர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகள் பூண்டி ஏரி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி ஆகியவை . இதில் முக்கியமான ஏரியாக பார்க்கப்படுவது சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி என்ற பெயரும் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
சோழர் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. ஏரியின் கரையில் சிவன் மற்றும் கன்னி கோவில் அமைந்துள்ளது. 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 3645 மில்லியன் கன அளவு நீரை தேக்க முடியும்.இந்த ஏரியின் கரையின் நீளம் மட்டுமே 9 கிலோ மீட்டர் ஆகும். ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் உள்ளன. செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்துதான் அடையாறு ஆறு பிறக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் வழியாக வங்கக் கடலை அடைகிறது. அடையாறுஆற்றின் தூரம் 42.5 கிலோ மீட்டர்.
மேலும் படிக்க: சென்னை மழை: 2015ம் ஆண்டுக்கு பின்னர் இதுதான் அதிகம்- தமிழ்நாடு வெதர்மேன்
2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளம்
2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. ஏரியின் நீர் அளவு தொடர்பாக அதிகாரிகளுக்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதனிடையே அவசர அவசரமாக ஏரியில் இருந்து 34,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதை விட அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இவ்வளவு நீர் திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் ஓரம் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஈக்காட்டு தாங்கல் மேம்பாலம், சைதாப்பேட்டை மேம்பாலம் ஆகியவற்றை மூழ்கடித்து வெள்ள நீர் சென்றது. பல ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் தங்களது உடமைகளை இழந்தனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட்... மிக கனமழை எச்சரிக்கை
2015ம் ஆண்டு சென்னை மழைக்கு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. தற்போது ஏரியின் நீர் இருப்பு 21.30 அடியை தாண்டியும் கொள்ளளவு 2934 மில்லியன் கன அடியையும் தாண்டியுள்ளது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ளது.
எனவே நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு , திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் ஒருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை மழை: 2015ம் ஆண்டு போன்ற சூழல் ஏற்படாது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chembarambakkam Lake, Very Heavy rain, Weather News in Tamil