Home /News /tamil-nadu /

புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள், பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள துறைமுகங்கள் வழியாக செல்கின்றன. இதன் காரணமாக  தமிழ்நாட்டின் வருவாய் பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தவிர்க்க 2007 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த  கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை  1655 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது.

    அதனை தொடர்ந்து  மதுரவாயல் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் சுமார் 20 கிலோமீட்டர் நீளம், 20-மீட்டர் அகலம் கொண்ட மேம்பாலத் திட்டத்திற்கு  2007- ஆம்  அனுமதி பெறப்பட்டது. இத்திட்டத்திற்கு  2009- ஆம் ஆண்டு  ஜனவரி  மாதம்  அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கல் நாட்டினார்.  அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்,  சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து, பணிகள்  தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.

    பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி  திட்டத்தை முடக்கினார் ஜெயலலிதா.  இந்நிலையில்,சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்றும் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.  தமிழ் நாடு பட்ஜெட்டில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த 5770 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    Also Read : பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

    இந்நிலையில் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த, சென்னை தலைமை செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  திங்கள் கிழமை கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ் நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு  5,855 கோடி ரூபாய் செலவில் பறக்கும் சாலைத்  திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  இதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

    இத்திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கு வரும் 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, CM MK Stalin, DMK

    அடுத்த செய்தி