சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான ஈரடுக்கு சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கி உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5800 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
சென்னை மற்றும் புறநகர்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது மட்டுமின்றி கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர முடியும்.
2009 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 15 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது பல்வேறு காரணங்களால், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முடங்கியது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் பாதை திட்டத்தை தூசு தட்டியுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம், இந்த திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் சில மாறுதல்களுடன் மீண்டும் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாக கூறினார். நான்கு பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து மேம்பாலத்திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த மே மாதம் சென்னையில் நடந்த விழாவில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, டெண்டர் கோரப்பட்டு, வரும் மார்ச் மாதத்துக்குள் டெண்டர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான பணிகளை முடுக்கி விடும் வகையில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் திட்டம் பிரதம மந்திரியின் காதி - சக்தி நேஷனல் மாஸ்டர் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 30 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்பட கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் குழு விதித்துள்ளது.
இந்த ஈரடுக்கு பாலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை வழியாக துறைமுகத்தை சென்றடைய உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, ஆயிரத்து 815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பாலம் 15 ஆண்டுகளுக்குப்பிறகு கூடுதல் நிதி மற்றும் செயல் திட்டங்களின் மூலம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. இது, புறநகர்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai