முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2015ல் இளம்பெண் கொலை.. அடையாளம் தெரிந்தும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்

2015ல் இளம்பெண் கொலை.. அடையாளம் தெரிந்தும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்

கொலை வழக்கு

கொலை வழக்கு

காதலித்த இளம்பெண் அருணாவைக் கொலை செய்துவிட்டு 7 ஆண்டுகளாகப் காவல்துறைக்கு தண்ணி காட்டிக் கொண்டு தலைமறைவாக உள்ளார் தினேஷ். இவரை கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்?

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு இளம் பெண்ணை கொலை செய்து தப்பிய தினேஷ் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக போலீசார் தேடி வருகின்றனர். எனினும் அவர் குறித்த ஒரு தகவலுக்கு கிடைக்காதது போலீசாருக்கு இந்த வழக்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொலை செய்த கொலை குற்றவாளியை சிறப்பு தனிப்படை அமைத்து கைது செய்ய முதலமைச்சருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தினேஷ்.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தினேஷ் அருணா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. . பட்டய படிப்பை முடித்து விட்டு  இந்திய உணவுக் காப்பீட்டுக் கழகத்தில் அருணா பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததால் அருணாவை தினேஷ் தனியாக அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் தினேஷ் அருணாவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னைத் தலைமைச் செயலகக் காலனியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டாம் தளத்தில்தான் தினேஷின் குடும்பம் வசித்து வந்தது. உடல்நலக்குறைவான அப்பா கண்ணப்பன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர், அம்மா ஜமுனா, இரண்டு சகோதரிகள் இதுதான் தினேஷின் குடும்பம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பாவை உடனிருந்து பார்த்துக்கொண்ட தாய், வேலைக்குப் போய்விட்ட சகோதரிகள், தனியாக இருந்த அடுக்குமாடி வீடு என்று தினேஷுக்குச் சூழ்நிலை முழுமையாகக் கைகொடுத்தது.

இதனால் அருணாவை வீட்டு அழைத்துள்ள தினேஷ் தனது எண்ணம் நிறைவேறாத ஆத்திரத்தில் காதலி அருணாவைக் கொன்றுவிட்டு தப்பியோடினார் . தாய் குமுதாவிடம் மாலை 7 மணிக்கு செல்போனில் பேசிக்கொண்டிருந்த அருணா, அதன்பின் மொத்தமாகவே பேச்சை நிறுத்திக்கொண்டு விட்டார். செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட, அருணாவின் தந்தை உடனடியாக வேப்பேரி காவல்நிலையத்தில் பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்தார்.

இதையும் படிக்க: கள்ளத்தொடர்பால் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அடையாற்றில் 3 நாளாக தேடியும் கிடைக்காத தலை

அன்றிரவே உடலெல்லாம் நகக் கீறல்கள், ரத்தக் காயங்கள் என கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  அருணாவின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அருணாவின் உடலை அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து போர்வையில் சுற்றி லிஃப்ட்டில் கீழே இறக்கிய தினேஷ், உடலை அங்கிருந்த காரில் ஏற்றமுடியாமல் காவலாளியை உதவிக்குக் கூப்பிட்டதும், உதவிக்கு வந்த காவலாளி போர்வையில் இருந்தது கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடல் என்று அறிந்து தினேஷைப் பிடிக்க முயன்றதும் இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சியாக இருந்தார்.

அருணா

அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தினேஷ் தப்பியோடி 7 ஆண்டுகள் ஆகிறது. எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத தினேஷ் இத்தனை ஆண்டுகளாக போலீஸிடம் சிக்காமல் தண்ணி காட்டி வருகிறார்.   கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியதால்  சம்பவம் நிகழ்ந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளியாக தினேஷை போலீசார் அறிவித்தனர்.

அவரது பெற்றோரை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால், இத்தனை ஆண்டுகளில் தனது பெற்றோரிடம் கூட தினேஷ் தொடர்புகொண்டு பேசவில்லை. தினேஷ் எங்கிருக்கிறார் என்ற தகவலைக்கூடப் பெறமுடியவில்லை என கூறப்படுகிறது. தினேஷ் புகைப்படத்தை வெளியிட்டு இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் அந்தப் பகுதியில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு..

இதனிடையே,  கொலை நடந்தபோது தனிப்படை அமைத்து தப்பியோடிய தினேஷ் தீவிரமாக தேடிய காவல்துறையினர், அதன் பின்னர் அவரை தீவிரமாக தேடவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் உயிரிழந்த அருணாவின் தாய் குமுதா. கொலைக்கான காரணம் தெரியாமல் 7 ஆண்டுகளாக தவிப்பதாக பெண்ணை இழந்து தவிக்கும் பெற்றோர் கதறி அழுகின்றனர்

தினேஷும் அருணாவும் காதலித்ததாக மற்றவர்கள் கூறினாலும், எங்களுக்கு அது குறித்து உண்மையான தகவல் தெரியவில்லை எனவும், 22 ஆண்டுகளாக மகளை பத்திரமாக வளர்த்து வந்ததாகவும், கொலை செய்து தப்பி ஓடிய குற்றவாளி தினேஷ் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது என்றும், அவருடைய குடும்பத்தினர் பற்றியும் எங்களுக்கு தெரியாது என்றும், கொலை குற்றவாளியை கைது செய்யாததால்  தங்களுடைய மகள் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியாமல் 7 ஆண்டுகளாக இரவு பகலாக தவித்து வருவதாக அருணாவின் தாயும் தந்தையும் தெரிவிக்கின்றனர்.

தலைமறைவாக உள்ள தினேஷ்

அருணா பூந்தோட்டியை வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை கூட எங்களிடம் காவல்துறையினர் பெற்றுத் தரவில்லை எனவும் அருணாவின் பெற்றோர் கூறுகின்றனர்.

சிறப்பு தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள குற்றவாளி தினேஷை  கைது செய்து  உரிய தண்டனையை பெற்றுத் தர முதலமைச்சரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தினேஷ் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்ததாகவும், கொலையாளி தினேஷ் செல்போனை விட்டுவிட்டு தப்பி ஓடியதால் அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

அவருடைய பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரின் செல்போனை கண்காணித்து வருவதாகவும் இதுவரை தினேஷை கண்டுபிடிக்க எந்த பயனுள்ள தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளரா அல்லது வெளிமாநிலங்களில் பதுங்கி உள்ளாரா எனவும் விசாரணை தொடர்ந்து நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

First published:

Tags: Crime News, Girl Murder