இரட்டைக் கொலை... 40 அடி ஆழ கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் - போலீஸாருக்கு ஷாக் கொடுத்த ரவுடி ராக்கப்பன்

படுகொலை

சென்னையில் தனியார் மருத்துவமனையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு பேரை கொலை செய்து 40 அடி கிணற்றில் கல்லை கட்டி வீசியதாக கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

  • Share this:
சென்னையில் தனியார் மருத்துவமனையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு பேரை கொலை செய்து 40 அடி கிணற்றில் கல்லை கட்டி வீசியதாக கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சென்னை நந்தனத்தில் ஆர்எஸ்பி எனும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மார்ச் 13-ம் தேதி இரவு 10 மணியளவில் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் அங்கு பணியில் இருந்த 75 வயதான மருத்துவர் ராமகிருஷ்ணனை கத்தி முனையில் மிரட்டியுள்ளார். மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் ஊழியர் உஷா என்பவரை மிரட்டி 10 சவரன் நகை பறித்துக்கொண்டு மருத்துவரின் ஹூண்டாய் க்ரிட்டா காரில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அந்தப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் மருத்துவமனையில் கைவரிசை காட்டியவர்கள் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து செல்போன் சிக்னல் மூலம் அந்தக் கும்பலை போலீஸார் பின் தொடர்ந்தனர். கொள்ளை கும்பல் சிவகங்கையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிவகங்கைக்கு விரைந்த தனிப்படை போலீஸார் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

கொள்ளை கும்பல் தலைவன் ராக்கப்பன் மீது ஏற்கனவே ஆறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராக்கப்பன் அவனது கூட்டாளிகள் வந்தவாசியை சேர்ந்த சீனிவாசன், பல்லாவரம் ரஜினி ஏழுமலை, மயிலாப்பூர் கருக்கா வெங்கடேசன், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த நெல்சன் மற்றும் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகிய 6 பேரையும் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கைதானவர்கள் பழைய குற்றவாளிகள் என்பதால் வேறேதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். ராக்கப்பனின் கூட்டாளியான அண்ணாதுரை மிஸ்ஸிங் நகை கொள்ளையில் அவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். அண்ணாதுரை குறித்த கேள்விகளுக்கு ராக்கப்பனிடம் இருந்து சரியான பதில்கள் இல்லை. இதனையடுத்து தனிப்படை போலீஸார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸாரின் டிரிட்மெண்டை தாங்கமுடியாமல் இரட்டை கொலை சம்பவம் குறித்து வாய் திறந்துள்ளார் ராகப்பன். அண்ணாதுரையையும், உடன் வந்த கூட்டாளி தங்க பாண்டியையும் தீர்த்துக் கட்டிவிட்டதாக ராக்கப்பன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அண்ணாதுரையையும், தங்கபாண்டியனையும் கொலை செய்து சடலத்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதர் மண்டி கிடக்கும் இடத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள பழைய கிணற்றில் கல்லை கட்டி இறக்கியதாக கூறியுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் கடந்த 9-ம் தேதி நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உதவியுடன் இருவரது சடலத்தையும் மீட்டனர். இதனையடுத்து இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மீதும் இரண்டு கொலை வழக்குகள் உள்ளது. ராக்கப்பனிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி தெரியவந்தது. பகுஜன்சமாஜ் கட்சி மாநில செயலாளர் முருகன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் ஆவடியில் கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். அண்ணாதுரையின் உறவினரான ஆனந்தன் என்பவர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தேர்தல் தோல்வியில் விரக்தியடைந்த ஆனந்தன் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிப்பெற்ற முருகனை கொலை செய்ய வேண்டும் என அண்ணாதுரையிடம் கூறியுள்ளார். அண்ணாதுரை தனது கூட்டாளியான ராக்கப்பனிடம் வேலையை ஒப்படைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் முருகனை ராக்கப்பன் டீம் கொலை செய்துள்ளது.

வழக்குகளுக்கான செலவுகளை அண்ணாதுரை செய்யவில்லை என ஆத்திரத்தில் இருந்துள்ளார் ராக்கப்பன். மேலும் பேசிய பணமும் கைக்கு தரமால் இழுத்தடித்துள்ளார் அண்ணாதுரை. ஆத்திரத்தில் இருந்த ராக்கப்பன் கடந்த 9-ம் தேதி தனது கூட்டாளியான கருக்கா வெங்கடேசன் என்பவரின் ஆட்டோவில் சூளைமேட்டில் உள்ள தங்கபாண்டியன் என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அண்ணாதுரையையும் அங்கே வரச் சொல்லியுள்ளனர். வெளியில் போய் பேசலாம் என நால்வரும் வந்துள்ளனர். ராக்கப்பனின் கூட்டாளியான நெல்சன் வாட்ச்மேனாக பணிபுரியும் இடத்துக்கு வந்துள்ளனர். நால்வரும் அங்கேயே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அண்ணாதுரை மீது ஆத்திரத்தில் இருந்த ராக்கப்பன் திட்டமிட்டபடி அவரை கொலை செய்துள்ளார். அண்ணாதுரையை கொலை செய்ததை உடன் வந்திருந்த தங்கபாண்டியன் வெளியில் சொல்லிவிடுவான் என்ற அச்சத்தில் அவரையும் கொலை செய்துள்ளான். இதனையடுத்து தனது கூட்டாளிகளை அழைத்த ராக்கப்பன் இருவரின் சடலத்தையும் கயிற்றில் கட்டி பாழடைந்த கிணற்றில் இறக்கியுள்ளான். இதன்பின்னர் சென்னையில் சில நாள்கள் தங்கியிருந்த ராக்கப்பன் டீம் அதன்பிறகு தான் மருத்துவமனைக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளது.

செய்தியாளர் : கோகுலரமணன்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: