தமிழகத்தில் நாளை கல்லூரிகள் திறப்பு: ’ரூட்டு தல’ பிரச்னைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை கல்லூரிகள் திறப்பு: ’ரூட்டு தல’ பிரச்னைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

பாலகிருஷ்ணன்

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நாளை கல்லூரிகள் திறக்கவுள்ளநிலையில், மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

  • Share this:
கொரொனோ நோய் பரவலைத் தடுப்பதற்காக அரசு ஊரடங்கு சட்டத்தை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அமல்படுத்தியது.  மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளை அரசின் மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என அரசு தெரிவித்திருந்தது. மார்ச் மாதம் இறுதியிலிருந்து பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் வருகின்ற ஏழாம் தேதி முதல் கல்லூரிக்கு வந்து பாடம் படிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஏழாம் தேதி முதல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்காக கல்லூரி திறக்கப்பட உள்ளது. பல மாதங்கள் கல்லூரி திறக்கப்படாமல் இருந்து  தற்போது திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அதேபோல நண்பர்களுடன் இணைந்து பேருந்தில் ரூட்டு தல பிரச்சனைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். பல மாதங்கள் கழித்து கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கல்லூரிக்கு வரும் போதும், போகும் போதும் பேருந்துகளின் மேற்கூரைகளில் அமர்ந்து பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு இன்னல் தராத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக மாணவர்கள் மற்றும் மாணவர்கள் பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் யாராகினும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, "ரூட்டு தல" பிரச்சனைகளில் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களுக்கு தகவல் அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: