Home /News /tamil-nadu /

சென்னையில் சித்தமருத்துவர் கொலை: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது- நடந்தது என்ன?

சென்னையில் சித்தமருத்துவர் கொலை: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது- நடந்தது என்ன?

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தி.நகர் ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் மலர்கொடி. 2002-ம் ஆண்டு அவருக்கு 67 வயது மே 21-ம் தேதி வீட்டில் இருக்கும்போது சேரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த ரொக்கம் ரூ.1 லட்சம் திருடு போயிருந்தது.

இது குறித்து கொலையுண்ட மலர்கொடியின் சகோதரர் சித்த மருத்துவர் ஆனந்தகுமார்(71)  என்பவர், முகமூடி அணிந்த மூவர் தன்னையும் தனது சகோதரியையும் நாற்காலியில் கட்டிப்போட்டு தனது தங்கையை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்கையடித்து சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாண்டிபஜார் காவல் நிலைய காவல் குழுவினர் விசாரணையில் சித்த மருத்துவர் மலர்கொடி தனது வீட்டை புதுபித்தபோது திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி(22) என்பவர் வீடு புதுப்பிக்கும் பணிக்கு வந்து பின்னர் மலர்கொடி வீட்டிலேயே தங்கி காவலாளி வேலை செய்து வந்துள்ளார். பின்னர் இவரின் சகோரதரர் ராமகிருஷ்ணனின் நண்பரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(24) என்பவர் வீட்டு வேலைக்காக மலர்கொடி வீட்டுக்கு வந்துள்ளார்.

அதன்பின் ராமகிருஷ்ணனும் சித்த மருத்துவர் மலர்கொடி வீட்டுக்கு வீட்டு வேலை செய்வதற்காக வந்துள்ளார். அழகர்சாமி, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணனின் நண்பர் சக்திவேல் ஆகியோர் சித்த மருத்துவர் மலர்கொடியின் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தனியாக வசித்து வரும் சித்த மருத்துவர் மலர்கொடியிடம் பணம் நகைகள் அதிக அளவில் இருப்பதை தெரிந்துக்கொண்ட மூவரும் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறிது காலம் தங்கையின் வீட்டில் தங்கியிருப்பதற்காக மலர்கொடியின் அண்ணன் ஆனந்தன் வந்துள்ளார். பின்னர் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவரும் வீட்டில் இருந்த சித்த மருத்துவர் மலர்கொடி மற்றும் அவரது அண்ணன் சித்த மருத்துவர் ஆனந்தன் ஆகியோரை நாற்காலியில் கை, கால்களை கட்டிபோட்டு அடித்துள்ளனர்.

அப்போது மலர்கொடி சத்தம்போடவே அவர் முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட  சக்திவேல்(A1), அழகர்சாமி (A2) ஆகிய இருவரை கடந்த 2002ம் ஆண்டு கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு ராமகிருஷ்ணன்(A3) என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் 20 ஆண்டு காலமாக தலைமறைவாகயிருந்த ராமகிருஷ்ணன் தனது சொந்த ஊருக்கு வந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாண்டி பஜார் போலீசார் திண்டுக்கல் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அழகர்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோர் கடந்த 2011ம் ஆண்டு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு நடைபெற்று வந்த வேளையில் சித்த மருத்துவர் ஆனந்த் உயிர் இழந்த காரணத்தினால் தொடர்ந்து வழக்கை நடத்த முடியாமல் இருந்துள்ளது.

இதனால் கொலை செய்த நபர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி வழக்கை நடத்த முடியாத சூழ்நிலையில் அழகர்சாமி மற்றும் சக்திவேல் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் ராமகிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அது தொடர்பாக தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் திண்டுக்கல்லில் உள்ள காவல் துறையினருக்கு குற்றம்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்தால் தகவல் கொடுக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தன் அடிப்படையில், ராமகிருஷ்ணனை திண்டுக்கலில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கொலைச் சம்பவம் நிகழ்ந்த பிறகு கேரளாவிற்கு சென்று தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன், அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து அங்கு ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு ரகசியமாக வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அழகர்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோர் விடுவிக்கப்பட்ட காரணத்தினால், இந்த வழக்கை போலீசார் கைவிட்டனர் என்ற அடிப்படையில் மீண்டும் சொந்த ஊரில் தைரியமாக வாழ வந்துள்ளார்.

ஆனால் அவர் மீதான வழக்கு முடிக்கப்படாமல் இருந்த நிலையில், அதை வைத்து போலீசார் கைது செய்தது ராமகிருஷ்ணனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ராமகிருஷ்ணன் கொடுக்கும் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அழகர்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடத்திற்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தில், வழக்கு கைவிடப்பட்டதாக நினைத்து குற்றவாளி சொந்த ஊருக்கு வந்தபோது கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி