கால்வாய் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் பரமகுரு, மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மணல் கடத்தலைத் தடுத்ததுதான் படுகொலைக்கு காரணமா?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் 38 வயதான வழக்கறிஞர் பரமகுரு. பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஷிபா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை பரமகுரு கொசவன்பாளையம் அருந்ததிபாளையத்தில் நடைபெறும் கால்வாய் பணிகளை நாற்காலியில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, பரமகுரு செல்போனில் பேசிக்கொண்டே அங்கிருந்து நடந்து மெயின் ரோட்டுக்கு சென்றுள்ளார்.
பரமகுரு, அருந்ததிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்மக் கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பரமகுருவை வெட்டியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்ப நடுரோட்டில் பரமகுரு ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி அவரது தலையின் உச்சியில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
தலை இரண்டாகப் பிளந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பரமகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியது.
பரமகுரு கொலை சம்பவம் கொசவம் பாளையம் முழுவதும் பரவியதை அடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் பூந்தமல்லி- திருநின்றவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான 32 வயது ராஜேஷ், ஆதி என்ற ஐயப்பன், ரவிக்குமார், கலை ஆகிய 4 பேரை திருநின்றவூர் போலீசார் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் குற்றவாளிகள், கொசவம்பேடு பகுதியில் உள்ள கொசவம்பாளையம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிக்கேட்டதால் பரமகுருவைக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு திருநின்றவூரில் நடந்த ஒரு கலவரத்தில் ராஜேஷ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
சென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்
கொசவம்பேடு ஊராட்சி மற்றும் பரமகுருவின் சொந்த ஊரான கொட்டாம்பேடு கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.