இளைஞருக்கு மரண பயத்தை காட்டுவதற்காக, உறவினரை வெட்டிய கும்பல்... சென்னையில் பரபரப்பு

மாதிரிப்படம்

இளைஞரைக் கொலை செய்ய வந்த கும்பல், அவர் கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞரின் சித்தப்பா மீது பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  சென்னை பல்லாவரம் அடுத்த மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 48 வயதான இஸ்மாயில். கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த புதன்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே நின்றிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல், இஸ்மாயில் மீது திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது. அதிர்ச்சியடைந்த இஸ்மாயில் சுதாரிப்பதற்குள், நெருங்கி வந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது.

  இஸ்மாயிலின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இஸ்மாயிலை மீட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில், இஸ்மாயில் தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

  மேலும், இஸ்மாயிலின் மனைவி கொடுத்த புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்ததை அடுத்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகள் மதுரவாயல் சுங்கச்சாவடி பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

  Also read: டி.ஆர்.பி மோசடி வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி சிஇஓ கைது

  அங்கு சென்ற தனிப்படை போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த ரிஸ்வான், புழல் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், மணலியைச் சேர்ந்த கிஷோர், மாதவரம் பகுதியைச் சேர்ந்த விஜய் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பட்டாக் கத்திகளையும் பறிமுதல் செய்த போலீசார், பல்லாவரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

  அப்போதுதான், இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. இஸ்மாயிலின் அண்ணன் மகனுக்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ரிஸ்வானுக்கும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கும்பல், புதன்கிழமை இரவு வந்துள்ளது. ஆனால் தாங்கள் தேடிய இளைஞர் இல்லாமல், அவரது சித்தப்பாவான இஸ்மாயில் நின்றிருப்பதை கண்ட கும்பல், அவரை மிரட்டும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது தெரியவந்தது.

  இதையடுத்து 4 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: