சூதாட்டத்தால் தற்கொலை - பெற்றோருக்கும், காதலிக்கும் உருக்கமான கோரிக்கை வைத்த கல்லூரி மாணவன்

சென்னையில் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தனது காதலிக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

  • Share this:
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவர், தான் பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக தற்கொலை செய்து கொண்டது எப்படி?

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார். காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.கொரோனா காலத்தில் கல்லூரி விடுமுறை என்பதால், தனக்கு பிடித்த டாட்டூ போடும் தொழிலை செய்து வந்துள்ளார்.


சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிதிஷ்குமார் ஞாயிற்றுகிழமை வீடு திரும்பவில்லை.

பெற்றோர் கடையின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். அவர் கடைக்கு சென்று பார்த்தபோது நிதிஷ்குமாரின் இருசக்கர வாகனம் கடை வாசலில் நின்றது. தொடர்ந்து கடையின் கதவை தட்டியும் திறக்காததால் மற்றொரு சாவியை வைத்து கடையை திறந்துள்ளார்.

அப்போது கடைக்குள் நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற அமைந்தகரை போலீசார், நிதிஷ்குமார் உடலை கைப்பற்றினர். அவரது கையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு தான் மட்டுமே காரணம் என கூறியுள்ளார். தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் கேஸ்டோ கிளப் என்ற ஆன்லைன் கேமில் தோற்றுவிட்டதாக எழுதியுள்ளார்.

இழந்த பணத்தை மீட்க தான் வேலை செய்த கடையில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கேம் விளையாடி அதையும் தோற்றுவிட்டதாக கூறியுள்ளார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் கடையில் இருந்து பணத்தை எடுத்தது தப்புதான் என்றும் தன்னை மன்னித்துவிடுமாறு கடையின் உரிமையாளரை கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பெற்றோரிடமும் மன்னித்துவிடுமாறு கூறியுள்ள அவர், தனது காதலிதான் தனக்கு உயிர் என்றும் அவரிடமும் தன்னை மன்னித்துவிடுமாறு எழுதியுள்ளார். அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் அதில் இருவரும் சேரலாம் எனவும் தற்கொலை கடிதத்தில் காதலிக்கு உருக்கமாக எழுதியுள்ளார்.

மேலும் தன்னோட போன் பாஸ்வர்டு எண்ணை குறிப்பிட்டுள்ள நிதிஷ்குமார், போனில் காதலி பெயரை ராட்சசி அப்படினு பதிவு செய்து வைத்திருப்பதாகவும், அவருக்கு தகவல் சொல்லுமாறும் கூறியுள்ளார்.

கடைசியாக தனது முகத்தை ஒருமுறை அவர் பார்த்துக்கொள்ளட்டும் எனவும் அந்த கடிதத்தில் நிதிஷ்குமார் கூறியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் கேம் விளையாடி அதன் மூலம் ஏற்படும் மன அழுத்தத்தால் பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட இளைஞர் பணத்தை இழந்து மன உழைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading