ஊரடங்கு காலத்தில் பலர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர். அப்படி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 32 வயதான செல்வராணி சில நாட்களுக்கு முன்னர் CLUB FACTORY என்ற மத்திய அரசால் தற்போது தடை செய்யப்பட்ட சீனாவின் வணிக செயலி மூலம் ஒரு நைட்டியை ஆர்டர் செய்துள்ளார்
தனது கணவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 550 ரூபாய் பணம் செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். பின்னர் பொருள் வர தாமதமானதால், ஆர்டரை கேன்சல் செய்து பணத்தை திருப்பித் தரச் சொல்லி கஸ்டமர் கேர் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
பணத்தை திருப்பிக் கொடுக்க வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிக்குமாறு எதிர்முனையில் பேசியவர் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக தங்கள் செல்போனில் டீம் வியூவர் ஆப்பை பதிவிறக்கம் செய்யும்படி அந்த நபர் கூறியுள்ளார்.
பின்னர் ஏடிஎம் கார்டின் இரண்டு பக்கத்தையும் மொபைலில் போட்டோ எடுக்கச் சொல்லியுள்ளார். அப்போது டீம் வியூவர் ஆப் மூலம் ஏடிஎம் கார்டு தகவல்களை திருடிய அந்த நபர், ஓடிபி எண்ணைக் கூறினால், பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும் எனக் கூறியுள்ளார்.
செல்வராணியும் அந்த ஓடிபி எண்ணை சொல்ல, 60 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் இருந்து திருடிவிட்டு அந்த நபர் போனை துண்டித்து விட்டார். பணத்தை திருப்பிக் கேட்டு மீண்டும் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டபோது, மீண்டும் அதே போல விவரங்களைக் கேட்டதால் ஆத்திரமடைந்த செல்வராணி போனை துண்டித்துவிட்டார்.
ஆன்லைன் மோசடி கும்பல் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராணி கணவருடன் கொரட்டூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கச் சென்றார்.
இது ஆன்லைன் மோசடி என்பதால் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் குற்றப்பிரிவு அலுவலகத்திற்குச் சென்று புகார் அளிக்குமாறு கூறி அனுப்பிவிட்டனர்.
ஆன்லைனில் கஸ்டமர் கேர் என கொடுக்கப்பட்டுள்ள எண்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் எண்தானா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொண்ட பின்னர் தொடர்பு கொள்ள வேண்டும் என ஆன்லைன் மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்
மோசடி கும்பல், கஸ்டமர் கேர் எண் என்று கூறி இணையத்தில் தங்கள் எண்களை உலாவவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரித்துள்ளனர்
மேலும், ஏடிஎம், கிரெடிட் கார்டு விவரங்களை யாரிடமும் கூறக் கூடாது என திரும்பத் திரும்ப சொல்லி வருவதாகவும், ஆனால் இது தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் தொடர்ச்சியாக இதுபோன்ற மோசடியை, ஆன்லைன் மோசடி கும்பல் அரங்கேற்றி வருவதாகவும் கூறியுள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.