3 மகன்கள் இருந்தும் அனாதை என கடிதம் எழுதிவைத்து முதிய தம்பதி தற்கொலை - சோக பின்னணி

மூன்று மகன்கள் இருந்தும் நாங்கள் அனாதை என கடிதம் எழுதி வைத்து விட்டு முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். என்ன நடந்தது தம்பதி வாழ்க்கையில்?

3 மகன்கள் இருந்தும் அனாதை என கடிதம் எழுதிவைத்து முதிய தம்பதி தற்கொலை - சோக பின்னணி
3 மகன்கள் இருந்தும் முதிய தம்பதி தற்கொலை
  • Share this:
சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு நெட்டால் தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர்கள் 60 வயதான குணசேகரன் - 55 வயதான செல்வி தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் செவ்வாய்ப்பேட்டையிலும், 2வது மகன் பெரம்பூரிலும் தங்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர்.

மூன்றாவது மகன், 29 வயதான ஸ்ரீதர், பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணமாகவில்லை. தச்சராக வேலை பார்த்து வந்த அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சம்பாதிப்பதை மதுவுக்கு செலவழித்து வந்தார். பெற்றோருக்கு பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

தச்சராக வேலை பார்த்து வந்த முதியவர் குணசேகரனுக்கு கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் போனது அதனால் பல இடங்களில் காவலாளியாக வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் அந்த வருமானம் கட்டுப்படியாகவில்லை.


வீட்டு வாடகையும் நான்கு மாதங்களாக கொடுக்காமல் நிலுவையில் இருந்ததால் செய்வதறியாது திகைத்த முதிய தம்பதி தங்கள் 2 மகன்களையும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களும் வாடகையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனவும், தங்களுடன் வந்து விடும்படியும் கூறியுள்ளனர்.

ஆனால் முதிய தம்பதி தங்கள் மனதில் என்ன நினைத்தார்கள் எனத் தெரியவில்லை; புதன்கிழமை இரவு இருவரும் வீட்டில் தனித்தனியாக துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இரவு 10 மணிக்கு மகன் ஸ்ரீதர் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்த போது பெற்றோர் துாக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் போலீசார் உதவி மூலம் கதவை உடைத்து சடலங்களை மீட்டனர்.முதியதம்பதியின் வேண்டுகோளை ஏற்று வியாழக்கிழமை மாலை சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் இருவரது உடல்களுக்கும் போலீசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன்பின் மகன்கள் முன்னிலையில், மின்மயானத்தில் சடலங்கள் எரியூட்டப்பட்டன.

 

மேலும் படிக்க...

ஊரடங்கு காலத்தில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

போலீசார் இதுகுறி்தது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading