• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • லாரி பேட்டரியில் வைத்து கொரியர் சர்வீஸ் மூலம் கடத்தப்படும் நெதர்லாந்து கஞ்சா.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

லாரி பேட்டரியில் வைத்து கொரியர் சர்வீஸ் மூலம் கடத்தப்படும் நெதர்லாந்து கஞ்சா.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

கஞ்சா கடத்தியவர்கள்

கஞ்சா கடத்தியவர்கள்

அசாம் மாநிலத்தில் இருந்து லாரி பேட்டரியில் வைத்து பிரபல கொரியர் சர்வீஸ் மூலம் நெதர்லாந்து (BUD) பட் எனப்படும் உயர் ரக கஞ்சா சென்னைக்கு கடத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பணக்கார வீட்டு இளைஞர்களைக் குறிவைத்து கடத்தப்படும் நெதர்லாந்து கஞ்சா விற்ற சட்டக் கல்லுாரி மாணவர் உட்பட 2 இளைஞர்கள் சிக்கியுள்ளனர்.

  • Share this:
உலகில் மனிதர்கள் சகல வசதிகளுடனும் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைப் போலவே நெதர்லாந்தில் விளையும் கஞ்சாவிற்கு சட்டரீதியிலான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சர்வதேச கஞ்சா கடத்தல் கும்பல் மூலம் நெதர்லாந்து பட் எனப்படும் கஞ்சா உலகம் முழுவதற்கும் கடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள பணக்கார இளைஞர்களைக் குறிவைத்து நெதர்லாந்து கஞ்சா விற்கப்படுகிறது. வெளிநாட்டுக் கஞ்சாவை விற்ற இளைஞர்கள் மயிலாப்பூரில் சிக்கியுள்ளனர்.

போலீசார் பொறிவைத்து பிடித்தது எப்படி?

சென்னை மயிலாப்பூரில் உயர்ரக கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலாப்பூர் ரயில் நிலையம் மற்றும் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு இளைஞர்கள் திரிந்துள்ளனர்.

அவர்களை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டபோது அவர்கள் கைப்பையில் மூன்றரைக் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர்கள் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த 26 வயதான சபாசக்தி மற்றும் மயிலாப்பூரைச் சேர்ந்த 21 வயதான யாசர் ஹனிபா என்பது தெரியவந்தது.

படிக்க...பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நியமன விவகாரம்: விசா வழங்க மறுக்கும் பாகிஸ்தான்..

இவர்கள் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அசீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு லாரி பேட்டரியும் அதில் இருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யாசர் ஹனிபா சென்னையில் மிகப்பிரபலமான தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரைக் கிலோ கஞ்சா, நெதர்லாந்து பட் எனப்படும் முதல் தர கஞ்சா வகையைச் சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது

இந்த கஞ்சா, நெதர்லாந்து நாட்டில் மருந்துகள் தயாரிப்பிற்கு தனியாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. மேலும் நெதர்லாந்தில் அனுமதிக்கப்பட்ட காபி கடைகளில், 5 கிராம் வரை வெளிப்படையாக விற்கப்படுகிறது. நெதர்லாந்தில் ஒரு கிராம் 870 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரைவிற்கப்படுகிறது. ஆனால் கள்ளச் சந்தையில் ஒரு கிராம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்று போலீசார் கூறுகின்றனர்.

நெதர்லாந்து கஞ்சா இந்தியாவுக்குள் கடத்தப்படுவது எப்படி என போலீசார் விசாரணையில் இறங்கிய போது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் காத்திருந்தன. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது முதாசீர் என்ற நபர் அசாம் மாநிலத்தில் கஞ்சா கும்பலுடன் சேர்ந்து இயங்கி வருகிறார். இவர் சென்னை வந்து செல்லும்போது இந்த இளைஞர்கள் மூன்று பேருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அசாமுக்கு கடத்தி வரப்படும் நெதர்லாந்து கஞ்சாவை, சென்னையில் விற்க அவர்களை முதாசீர் பயன்படுத்தியுள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து லாரி பேட்டரிகளில் நெதர்லாந்து கஞ்சாவைப் பதுக்கி பிரபல கொரியர் சர்வீஸ் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளார் முதாசீர்.

படிக்க...வேளாண் மசோதா எதிர்ப்பு: ரகளையில் ஈடுபட்டதாக 8 எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவு..

பெங்களூருவில் இருந்து தென்மாநிலங்களுக்கு அதேபோல லாரி பேட்டரிகளில் பதுக்கி பிரபல கொரியர் சர்வீ்ஸ் மூலம் கடத்தப்படுகிறது. லாரி பேட்டரியில் கஞ்சாவை வைத்து அதனை கொரியர் சர்வீசில் அனுப்பி வைத்தால் எவ்வித போலீஸ் பிரச்சனையும் வராது என்பதால் போதை கும்பல் இந்த முறையைக் கையாண்டு வருகிறது.

அப்படி பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட கஞ்சாவை சட்டக் கல்லுாரி மாணவர் யாசர் அனிபா வாங்கி, கல்லூரி மாணவர்களிடம் ஒரு கிராம் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்றுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவருமே பணத்தாசையால் பலமுறை நெதர்லாந்து கஞ்சாவை கடத்தியது தெரியவந்ததுள்ளது.

மேலும் இதுபோல கொரியர் சர்வீஸ் மூலம் கடத்தப்பட்டு சென்னைக்குள் கொண்டு வரப்படும் கஞ்சா, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணக்கார வீட்டு இளைஞர்களை குறிவைத்து விற்கப்படுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்திய கஞ்சா வகைகள் 100 கிராம் 500 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பணத்தைப் பற்றி கவலைப்படாத கல்லூரி மாணவர்கள், வசதியான வீட்டு இளைஞர்கள் முதல் தர கஞ்சாவான நெதர்லாந்து கஞ்சாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதால், கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் படிக்க...இந்தியாவில் ஒரே நாளில் 1,130 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு..

கைதான இளைஞர்களிடம் இருந்து மூன்றரைக் கிலோ கஞ்சா, கஞ்சா கடத்த பயன்பட்ட லாரி பேட்டரிகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நெதர்லாந்து கஞ்சா கடத்தலின் பின்னணியில் யார் யார் உள்ளனர், பெங்களூரில் செயல்பட்டு வரும் கஞ்சா கடத்தல் கும்பல் இவர்களுக்கு பழக்கமானது எப்படி? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா கடத்தலின் முக்கிய மூளையான முதாசீரையும் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: