உயிரைப் பணயம் வைத்து 15 வயது சிறுமி 28-வது மாடியில் சாகசம் - திகில் வீடியோ

சென்னை அருகே ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பின் மிக உயரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் சிறுமி ஒருவர் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18
  • Last Updated: August 12, 2020, 8:30 AM IST
  • Share this:
வெளிநாடுகளில் செல்பி மோகம் பிடித்தவர்கள், சாதனை வெறி கொண்டவர்கள் உயரமான கட்டிடங்களின் உச்சியில் உள்ள தடுப்பில் நடந்து செல்வது, மேலிருந்து கீழே விழுவது என தெறிக்க விடும் சாகசங்கள் சகஜமாக நடந்து வருகின்றன. சென்னையிலும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. 29 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியில் சிறுமி ஒருவர் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் 29 மாடிகள் கொண்ட பல அடு்க்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட ஒரு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு கட்டிடத்தில், 28 வது மாடியை ஒட்டி வெளிப்புறம் உள்ள தடுப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து நடந்து செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ எடுத்தவர்கள், இந்த சிறுமி மூன்றாவது முறையாக இப்படி நடந்து செல்வதாகப் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்த மாமல்லபுரம் ஏ.எஸ்.பி மற்றும் கேளம்பாக்கம் போலீசார், அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று விசாரணையைத் தொடங்கினர்.அப்பொழுது அங்கு வசித்து வரும் ஒரு தம்பதியினரின் 15 வயது மகள், தனது அண்ணனிடம் பந்தயம் வைத்து உயிரை பணயம் வைத்து 28வது மாடியின் வெளிப்புறத்தில் உள்ள தடுப்புச் சுவரில் நடந்து சென்றது தெரியவந்தது.

பின்னர், அந்த தம்பதியை நேரில் சந்தித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அவர்கள் பெயரைக் கூறவும், அவரது மகன், மகள் பெயரைக் கூறவும் விருப்பமில்லை என போலீசாரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவாகியுள்ளதா என கேளம்பாக்கம் போலீசாரிடம் விசாரித்தபோது, புகார் எதுவும் பதிவாகாததால் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர். பந்தயம் கட்டி விளையாடுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது எனச் சுட்டிக் காட்டிய போலீசார், இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading