பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைதில் மவுனம் காக்கும் போலீஸ்.. கை கால் முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி

காக்காத்தோப்பு பாலாஜி

புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர் ஜிவால் ரவுடிகளுக்கு சென்னையில் இடமில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

  • Share this:
பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.

பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி என்ற காக்கா தோப்பு பாலாஜி. வடசென்னையின் பிரபல ரவுடியான இவர் மீது 52 வழக்குகள் உள்ளது. 7 கொலை வழக்குகள், கொலை முயற்சி 20 வழக்குகள், பிற வழக்குகள் 25 உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த பிப்வரி மாதம் சென்னை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு கடந்த மாதம் 25-ம்தேதி ஜாமீன் பெற்று அடைக்கப்பட்டிருந்த கடலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்தநிலையில் தலைமறைவானதாக கூறி அவரை சென்னை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் கிராமத்தில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் துரைக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு சென்னையின் எல்லை பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டது எப்படி? என்ன வழக்கிற்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரங்களை விசாரணைக்கு பிறகு தெரிவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று காலை ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை ஆர்கே நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகா விஷ்ணு தலைமையிலான போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். கை, காலில் படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பிறகு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கைதிகள் அனுமதிக்கப்படும் வார்டில் காக்கா தோப்பு பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

என்ன வழக்கில் காக்கா தோப்பு பாலாஜி கைதானார்? கை, காலில் எலும்புமுறிவு எப்படி ஏற்பட்டது? என்பது தொடர்பாக காவல்துறை தகவலை தெரிவிக்க மறுத்து விட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரபல ரவுடி சிடி மணியுடன்  அண்ணா சாலையில் காரில் பயணம் செய்தபோது காக்கா தோப்பு பாலாஜியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது ரவுடி கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர் ஜிவால் ரவுடிகளுக்கு சென்னையில் இடமில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி சில நாட்களுக்கு முன் தென்சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது வடசென்னையின்  பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆணையர் சங்கர் ஜிவால், தெரிவித்தது போல சென்னையில் வலம் வரும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: