சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை.... ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் பயணித்தார். சீன அதிபர் கிண்டியில் சிறிதுநேரம் தங்கியிருந்து கார் மூலம் மாமல்லபுரம் சென்றார்.

News18 Tamil
Updated: October 12, 2019, 8:12 AM IST
சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை.... ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் பயணித்தார். சீன அதிபர் கிண்டியில் சிறிதுநேரம் தங்கியிருந்து கார் மூலம் மாமல்லபுரம் சென்றார்.
News18 Tamil
Updated: October 12, 2019, 8:12 AM IST
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி உடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக, சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று சென்னை வந்தடைந்தார். காலை பத்து மணியளவில், ஏர்-சீனா விமானம் மூலம் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்ட அவர், பிற்பகல் 2:10 மணிக்கு, சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்புக்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஷி ஜின்பிங்கிற்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, சீன அதிபரை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பாரம்பரிய நடனக் கலைகளான கரகாட்டம் நடைபெற்றது.




அதன்பின்னர் ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.



Loading...

இதைத் தொடர்ந்து, தனது பிரத்யேக காரில், கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்றடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சீன அதிபர் தங்கும் கிண்டி ஐ.டி.சி. கிராண்ட சோழா நட்சத்திர விடுதி வரையும் சாலையின் இருபுறங்களிலும் தமிழகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

சீன அதிபருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்புத்துறை அமைச்சர் ஹி லைபெங், சீன கம்யூனிஸ்ட் கட்சி இயக்குநர் ஜெனரல் டிங் ஜியூஜியாங், வெளியுறவுத்துறை அலுவலக இயக்குநர் யாங் ஜிஷி உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.

முன்னதாக காலை 11 மணியளவில், சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.



தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவர் ஜி.கே.மணி, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விமான நிலைய வளாகத்தில் செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, தொண்டர்கள் பிரதமரை வரவேற்றனர். சென்னை வந்து இறங்கியவுடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் மோடி ட்வீட் செய்தார்.



கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பெஞ்சமின் வரவேற்றனர்.

அதன்பின்னர், அங்கிருந்து கார் மூலம் கோவளத்தில் உள்ள தாஜ் FISHERMANS COVE விடுதிக்கு சென்றார்.

சென்னை ஐடிசி தங்கும் விடுதியில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு மாமல்லபுரம் நோக்கி புறப்பட்ட ஷி ஜின்பிங்கிற்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



ஜின்பிங் செல்லும் வழியில் சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், இந்திய மற்றும் சீன தேசியக்கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி, ஜின்பிங் படங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளையும் மக்கள் ஏந்தி நின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் ஜின்பிங்கை வரவேற்று தங்கள் உற்சாகத்தை காட்டினர்.



வழிநெடுக நாதஸ்வரம், மேளதாளம், செண்டை மேளம், பேண்டு வாத்தியம் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன. தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பட்டாம்பூச்சி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய ஆட்டங்களும் களைகட்டின.



இதனிடையே, கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, பிரதமர் மோடி மாமல்லபுரத்தின் அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்து சேர்ந்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி சட்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு மோடி வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்து சேர்ந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை. பிரதமர் மோடி மகிழ்ச்சி பொங்க கைலுக்கி வரவேற்றார்.

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...