வீட்டிலிருந்தே பணிபுரிந்த இளைஞர் வேலை பளு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை!

தற்கொலை செய்துகொண்ட ஹரிபிரசாத் (26).

நிறுவன வேலைப்பளுதான் இவரது தற்கொலைக்குக் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை கிழக்கு முகப்பேர் வளையாபதி சாலையைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (26). இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு அம்பத்தூரில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வந்த அவர், நேற்று மாலை தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கம்பியில் கேபிள் வயரைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட ஹரிபிரசாத் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே வெளிநாட்டில் இருக்கும் தனது நிறுவன வாடிக்கையாளர்களிடம் தினமும் ஃபோனில் பேசி பணியாற்றி வந்திருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வேலைப்பளு அதிகமாக இருந்ததும், அதனால் நிறுவன மேலாளர்கள் ஹரி பிரசாத்துக்கு நெருக்கடி தந்ததும் தெரியவருகிறது.

மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் புலப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொண்ட ஹரிபிரசாத்தின் தந்தை பாலச்சந்திரன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் இந்த காரணத்தையே குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக நிறுவன மேலாளர்கள் டார்கெட் முடிக்கவில்லை எனவும் சரியாக வேலை செய்யவில்லை எனவும் தொடர்ச்சியாக கால் செய்து ஹரிபிரசாத்தை திட்டியதாகவும் அதனால் ஹரி பிரசாத் தனது நண்பர்களிடத்தில் மனம் நொந்தபடி ஃபோனில் பேசியதாகவும் அவருடன் பணியாற்றும் அவரின் நண்பர்கள் கூறுகின்றனர்.

நிறுவன வேலைப்பளுதான் இவரது தற்கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என ஜே.ஜே. நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published: