ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி.. மர்மமான முறையில் மரணம்...!

ஒன்றரை ஆண்டுகள் 16 உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி.. மர்மமான முறையில் மரணம்...!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 14, 2020, 5:51 PM IST
  • Share this:
விழுப்புரம் மாவட்டத்தில், தாய்மாமன் உள்ளிட்ட உறவினர்கள் 16 பேரால் ஒன்றரை ஆண்டுகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி சென்னையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உடன் பிறந்த சகோதரியின் இரண்டு பெண் குழந்தைகளை தாய்மாமன் உள்ளிட்ட 16 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் இருந்த சிறுமி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். உறவினருடன் அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் பிறந்தன. கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார் அந்தப் பெண்.


பின்னர் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்த அவர், அங்குள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு உடன் பணியாற்றிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது; முதல் கணவருக்கு பிறந்த இரு பெண் குழந்தைகளும் சொந்த ஊரில் பாட்டியிடம் வளர்ந்து வந்தனர். 9 வயது மற்றும் 7 வயதான இரு சிறுமிகளும் தாயின் சொந்த ஊரிலேயே உள்ள பள்ளியில் படித்து வந்தனர்

இந்த நிலையில், பெண்ணின் உடன் பிறந்த தம்பியான கஜேந்திரன், 2018 ஆம் ஆண்டு முதல் இரு சிறுமியையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.மேலும் தனது உறவினர்கள் சிலரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்துள்ளார்; வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் குழந்தைகளை மிரட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு சிறுமிகளின் தாய் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது நடந்த கொடூரங்களை தாயிடம் கூறி அழுதுள்ளனர்.

தனது உடன்பிறந்த தம்பியே தனது குழந்தைகளை சீரழித்த அதிர்ச்சியில் அந்த பெண், குழந்தைகளை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியி்ல் சேர்த்து படிக்க வைத்தார். பின்னர் மூத்த மகளின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளியில் ஆசிரியை அதைக் கவனித்துள்ளார்.

சிறுமியிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை அவர் சொல்லவே அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடனடியாக பள்ளி நிர்வாகம் மூலம் புதுச்சேரி சைல்டு லைனுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் தெரிவித்து அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் நடந்த கொடூரம் உண்மை எனத் தெரியவரவே, சிறுமியர் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனை அடுத்து, போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த 6 பேர் என 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அந்த குழந்தையை அவரது தாய் சென்னை அழைத்து வந்து கே.கே.நகரில் வாடகை வீட்டில் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கழிவறை செல்வதற்காக அந்த சிறுமி சென்றுள்ளார்.  நெடுநேரமாகியும் கழிவறையிலிருநது வெளியே வராததால், கதவை தட்டியுள்ளார்.

கதவு திறக்கப்படாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அந்த சிறுமி இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சென்ற கே.கே.நகர் போலீசார் சிறுமி உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மரணத்தை சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்களால் பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த சிறுமி, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்