Home » News » Tamil-nadu » CHENNAI METRO WATER ANNOUNCES PLANS TO CONVERT DRAINAGE WATER TO DRINKING QUALITY AND CONNECT THEM WITH RESERVOIRS

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க குடிநீராக மாறும் கழிவுநீர்...!

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இந்த திட்டம் நிறைவேறினால் தங்களது தேவைக்காக அந்த நீரை தாங்கள் வாங்கி உபயோகிப்பதாக உறுதியளித்தனர் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க குடிநீராக மாறும் கழிவுநீர்...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:56 PM IST
  • Share this:
சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரை குடிக்கும் தரத்திற்கு சுத்திகரித்து ஏரிகளில் விடுவதற்கு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

சென்னை நகருக்கான ஒரு நாள் குடிநீர்த் தேவை அதிகபட்சமாக 1,200 மில்லியன் லிட்டரும் குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டராகவும் இருக்கிறது. இவற்றில் 50% நீர் ஏரி, குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைக்கிறது. 25% கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளில் இருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 25% நிலத்தடி நீரிலிருந்து பூர்த்திசெய்யப்படுகிறது.

பருவமழை பொய்த்து சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய நீர்நிலைகள் வற்றும்போது நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பது அதிகரிக்கிறது.


இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கழிவுநீரை குடிக்கும் தரத்திற்கு சுத்திகரித்து அதை நீர்நிலைகளில் விட்டு தேவை அதிகரிக்கும் நாட்களில் குடிநீர்த் தேவைக்காக மீண்டும் சுத்திகரித்து அந்நீரைப் பயன்படுத்த சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. இதில் ஒரு சதவீதம் மட்டுமே திடக்கழிவு ஆகும். புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் முதலில் கழிவு நீரிலிருந்து திடக்கழிவுகள் பெரிய சல்லடைகளின் மூலம் பிரிக்கப்படும்.

இதன் பிறகு அடுத்தடுத்த நிலைகளில் சின்னஞ்சிறிய துகள்கள் மற்றும் நுண்கிருமிகள் அகற்றப்படும்.இதன் பிறகு, அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் முறையில் அதிலுள்ள அனைத்துத் துகள்களும் நீக்கப்படும். மேலும் இந்த நீரில் ஓசோன் மற்றும் குளோரின் சேர்க்கபடும்.இந்த நிலையிலேயே கழிவுநீரானது குடிக்கத்தகுந்த நீருக்கான இந்திய தரமான IS 10500ஐ எட்டிவிடும் என்றாலும்கூட நேரடியாக நீர் குடிநீர் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது. மாறாக அருகிலுள்ள ஏரியில் விடப்படும்.

அங்கிருந்து மீண்டும் முதல்நிலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு தேவைப்படும் பயனாளர்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த நீரை ஏரிகளில் விடும்போது அந்த ஏரியை சுற்றி உள்ள நிலத்தடி நீரும் உயரும் சாத்தியமுள்ளது.

 

பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் 126 மில்லியன் லிட்டர் கழிவு நீரிலிருந்து 60 மில்லியன் லிட்டர் கழிவுநீரை குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்து பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி கீழ்கட்டளை ஏரி ஆகிய இடங்களில் விடப்படும்.

நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் 117 மில்லியன் லிட்டர் கழிவுநீரில் 60 மில்லியன் லிட்டர் கழிவு நீர் குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்து போரூர் ஏரியில் விடப்படும்.

கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் 214 மில்லியன் லிட்டர் கழிவு நீரில் 60 மில்லியன் லிட்டர் கழிவு நீர் குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்து அயப்பாக்கம் ஏரியில் விடப்படும்.

கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் 270 மில்லியன் லிட்டர் கழிவு நீரில் 80 மில்லியன் லிட்டர் கழிவு நீர் குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்து ரெட்டேரியில் விடப்படும்.

இப்படியாக மொத்தம் 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை குளிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்ய சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

திட்டத்திற்கு ஆகும் செலவு:

இந்த திட்டத்திற்கு 1400 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. செலவு அடிப்படையில் பார்த்தால்கூட கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு குறைந்த செலவுதான் ஆகும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோலிட்டர் கடல்நீரை குடிநீராக்குவதற்கு 60 ரூபாய் செலவாகிறது மேற்பரப்பில் உள்ள நீரை பயன்படுத்த 6 ரூபாயிலிருந்து 23 ரூபாய் வரைக்கும் செலவாகிறது. ஒரு கிலோ லிட்டர் நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு 38 ரூபாய் செலவாகிறது.

தலைகீழ் சவ்வூடுபரவல் முறையில் ஒரு கிலோ லிட்டர் தண்ணீரை உருவாக்க 28 ரூபாய் செலவாகிறது. ஆனால் இந்த மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் பெறப்படும் ஒரு கிலோலிட்டர் நீருக்கு 18 ரூபாய் மட்டுமே செலவாகிறது.

முன்மாதிரி திட்டங்கள்:

இந்தியாவில் பிற மாநிலங்கள் கூட கழிவுநீரை குடிக்கும் தரத்திற்கு சுத்திகரித்து பயன்படுத்தி வருகின்றன.உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 144 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடி மெட்ராசில் 4 மில்லியன் லிட்டர் கழிவு நீரை குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஐஐடி வளாகத்திற்குள் இருக்கும் சிறிய ஏரியில் விடப்பட்டும்.

பின்னர் இதர தேவைகளுக்காக ஏரியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் 8 டிஎம்சி கழிவு நீர் குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு கோலார் மற்றும் சிக்கபல்லபூரா மாவட்டங்களின் 126 நீர்நிலைகளில் விடப்படுகிறது.

உலக நாடுகளில் கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் பயன்பாடு:

உலக அளவில் கூட பல்வேறு நாடுகள் கழிவு நீரை குடிக்கும் தரத்திற்கு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் நாடு 85% கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகின்றது சிங்கப்பூர் 30% கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகிறது ஸ்பெயின் நாடு 15% கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகிறது ஆஸ்திரேலியா நாடு 20% கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகிறது.

கருத்துக்கேட்புக் கூட்டங்கள்:

இந்த புதிய திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கடந்த இரண்டு மாதங்களில் நடத்தப்பட்ட குறிப்பாக சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் மற்றும் அடையாறு பெருங்குடி சோழிங்கநல்லூர் வளசரவாக்கம் ஆலந்தூர் ஆகிய இடங்களில் பல்வேறு நாடுகளில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டுமான நிறுவனங்கள் கல்லூரிகள் அரசு நிறுவனங்கள் தனியார் ஹோட்டல்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இந்த திட்டம் நிறைவேறினால் தங்களது தேவைக்காக அந்த நீரை தாங்கள் வாங்கி உபயோகிப்பதாக உறுதியளித்தனர் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...

First published: February 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading