கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு,மெட்ரொ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கோவில் குளம் ஆகிய புராதன கோவில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.
இந்த கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட பணிகள் நடந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா அரங்கம் உள்ளிட்ட புராதன கட்டிடங்கள் பாதிக்காத வகையில் சுரங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நூறு ஆண்டுகளுக்கு மேலான கோவில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4 வது வழித்தடத்தில் உள்ள கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... மதுரை மேயர் கணவரின் அதிகார அத்துமீறல்களை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் - செல்லூர் ராஜூ
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோவில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட ஏழு கோவில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் எனவும், இந்த கோவில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழக அரசு,மெட்ரொ ரயில் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு,ஏற்கனவே உள்ள வழக்கோடு சேர்க்க உத்தரவிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai metro, Madras High court