இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 60 முதல் 80 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், பருத்தி ஆடைகளையே அணியவும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
05.04.2021 முதல் 07.04.2021 வரை கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல் 1200 முதல் பிற்பகல் 0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும்.
வளிமண்டலத்தில் 1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சியின் காரணமாக 05.04.2021 அன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
Also read... 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை...!
06.04.201 முதல் 08.04.2021: வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 09.04.2021: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
எடப்பாடி (சேலம்) 3, எருமைப்பட்டி (நாமக்கல்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), ராசிபுரம் (நாமக்கல்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கிணற்கோரை (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 2. தம்மம்பட்டி (சேலம்), கெட்டி (நீலகிரி), எமெராலட் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), நத்தம் (திண்டுக்கல்) தலா 1 இருந்தது .
மீனவர்களுக்கான எச்சரிக்கை: எதுவுமில்லை.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.