Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு...

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை மதுரை திண்டுக்கல் தேனி கரூர் திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

Also read... வடமாநிலங்களில் தொடரும் கனமழை - கோவில்பட்டியில் ₹ 200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நன்னிலம் ஆகிய பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கும், ஜூலை 30 தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும் வருகிற 31-ஆம் தேதி வரை கடலோர கேரளா மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு ஜூலை 30, 31ம் தேதிகளில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 1 வரையிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 29ஆம் தேதி இரவு 11:30 மணி முதல் கடல் அலையானது 2.2 மீட்டர் முதல் 3.2 மீட்டர் வரை எழும்புக்கூடும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rain Update, Weather Update

அடுத்த செய்தி