திருநங்கைகளைக் குறிவைத்து காதல் நாடகமாடி பணம் பறித்த இளைஞர் கைது

திருநங்கைகளைக் குறிவைத்து காதல் நாடகமாடி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநங்கைகளைக் குறிவைத்து காதல் நாடகமாடி பணம் பறித்த இளைஞர் கைது
முகமது உசேன் மற்றும் திருநங்கை பிரியங்கா.
  • Share this:
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருநங்கை பிரியங்காவை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக ஆசை வார்தைகள் கூறி அவருடன் பழகிவந்த முகமது உசேன், தான் கப்பலில் பணியாற்றுவதாகக் கூறி வந்துள்ளார்.

இவர் பிரியாங்காவின் டெபிட் கார்ட், கைபேசி என அனைத்தையும் பயன்படுத்திவந்துள்ளார். பிரியங்காவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5000, ரூ.10,000 என 2.30 லட்சத்துக்கும் மேல் பணத்தை உசேன் திருடியதாகக் கூறப்படுகிறது. இதுதெரிந்து பிரியங்கா, உசேனிடம் விசாரித்தபோது, தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு செல்போன் நம்பரையும் மாற்றிவிட்டு உசேன் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது உசேன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மார்ச் மாதம் பிரியங்கா, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.


இதனிடையே தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் யுவஸ்ரீ (எ) முத்துலெட்சுமி என்ற திருநங்கை கடந்த வாரம் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை தொடர்பான புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவியுள்ளது.
அதைப் பார்த்தபோதுதான் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த திருநங்கை பிரியங்காவை ஏமாற்றிய முகமது உசேன் தூத்துக்குடியில் யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் அமைந்தகரையில் உள்ள திருநங்கைகள் தாங்கள் புகார் கொடுக்கும் போதே அந்த நபரைக் கைது செய்திருந்தால் தற்போது ஒரு திருநங்கை தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என காவல் நிலைய முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Also see:

பின்னர் காவல்துறையினர் அவரைக் கைது செய்வதாகக் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அமைந்தகரை காவல்துறையினர் தூத்துக்குடி சென்று முகமது உசேனை கைது செய்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் யுவஸ்ரீ (எ) முத்துலட்சுமியை முகமது உசேன் ஆறு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் யுவஸ்ரீ வீட்டுக் கடன் வாங்கி, அந்தப் பணத்தைத் திருப்பிக் கட்டுவதில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தச் சண்டையின் முடிவில் யுவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. மேலும் முகமது உசேன் சென்னை ரிச்சி தெருவில் உள்ள மொபைல் கடை ஒன்றில்  வேலைப்பார்த்து வந்துள்ளார் என்பதும்  அப்போது இவருக்கு பல திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பல திருநங்கைகளை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்யும் முன்பு திருநங்கை யுவஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலத்தில் முகமது உசேன் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading