Home » News » Tamil-nadu » CHENNAI LOCKDOWN MIGRANT WORKERS ISSUE JAYARANJAN INTERVIEW SAN VET

’சீர்திருத்தம் என்று சொல்லிவிட்டு வேட்டியை உருவினால் என்ன செய்வது...?’ ஜெயரஞ்சன் நேர்காணல்

சென்னையை விட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேறிவரும் நிலையில், இந்த நிலை எதை நோக்கி செல்லும் என்பது தொடர்பாக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அளித்துள்ள பதில்கள்

’சீர்திருத்தம் என்று சொல்லிவிட்டு வேட்டியை உருவினால் என்ன செய்வது...?’ ஜெயரஞ்சன் நேர்காணல்
ஜெயரஞ்சன்
  • News18
  • Last Updated: June 19, 2020, 5:29 PM IST
  • Share this:
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தபட்ட ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தும், லாரியிலும், ரயிலிலும், கிடைத்த வாகனங்களிலும் தொற்றிக் கொண்டு தங்கள் சொந்த மாநிலங்களை சென்றடைந்தனர்.

பயணத்தின் போது பசியாலும், விபத்தாலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த புலம்பெயர் மக்களின் அவலங்கள் குறித்து இந்தியர்கள் நாள்தோறும் சமூக வலைதளங்களின் கொந்தளித்து தீர்த்தார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும் தவறி விட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. தற்போது, "புலம்பெயர் அவலம் 2.0" என்று குறிப்பிடும் அளவிற்கு மீண்டும் ஒரு அவலம் தமிழக தலைநகரில் நடந்து கொண்டிருக்கிறது.


பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிழைப்புக்காக வந்த மக்களை அன்புடன் வரவேற்று, பல்லாண்டு காலம் வாழவைத்த சென்னை இப்போது, கொரோனாவுடன் அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இவை குறித்து பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் நியூஸ் 18-க்கு பேட்டியளித்தார்.கே: எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றால் போதும் என்கிற மனநிலைக்கு புலம்பெயர் மக்கள் வருவதற்கு காரணம் என்ன ?

ப: ஊரடங்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. தினம், வாரம், மாதம் என தொழில்களின் அடிப்படையில் பல விதமாக சம்பளம் சென்னையில் கிடைத்து வந்தது. தற்போது, சிலருக்கு ஒரு மாதம் கழித்து கிடைக்கும் என்றுள்ளது. இன்னும் சிலருக்கு சம்பளம் இருக்குமா இருக்காதா என்கிற சந்தேகத்துடன் வாழவேண்டிய கட்டாயம். இன்னும் பலருக்கு சம்பளமே இல்லை, செலவு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் 3 வேளை பசிக்கும். மாதம் பிறந்தால் வாடகை, கடன் கட்ட வேண்டும். 10 கிலோ அரிசியும், 1000 ரூபாய் பணமும் கொடுத்து விட்டால் எல்லாம் முடிந்து விடுமா..?
கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறது. எனவே, இந்த நிலை இப்போதைக்கு சீராக வாய்ப்பில்லை என்று உணர்ந்த மக்கள் சொந்த ஊர்களை நோக்கி கிளம்பி விட்டனர்.

கே: மீண்டும் அவர்கள் சென்னைக்கு வர விரும்புவார்களா ?*

ப: பிரசவ வைராக்கியம் மாதிரி தான் இவர்களின் நிலை. இந்த பிரச்சனை நெடுங்காலம் தாக்குப் பிடிக்காது. இங்கு இருந்தால் பசிக்கிறது, உணவுக்கு வழியில்லை என்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், அங்கும் பசித்தால் மீண்டும் இங்கேயே திரும்பி வருவார்கள். சொந்த ஊரை விட்டுவிட்டு வர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையா என்ன...? வேறு வழியில்லை.

வாழ்க்கையின் அந்தந்த கணங்கள் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கின்றன. இங்கே எது நடந்தாலும், யார் சென்றாலும், சென்னை மாறப் போவதில்லை.
படிக்கசுஷாந்த் சிங் பிரிவால் தவித்து வாடும் செல்லப்பிராணி

படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..
கே: ஊரடங்கும் அது ஏற்படுத்திய பாதிப்புகளும் வாழ்வியல் ரீதியாக என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்?

ப: இந்த காலகட்டம் சில முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' நடைமுறை அதிகரிக்கலாம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியப்படாது. கொத்தனாரும், சித்தாளும் ஆன்லைனில் வீடு கட்ட முடியுமா...? ஆட்டோவையும், காரையும் ஒட்டிப் பிழைப்பவர்கள் என்ன செய்ய முடியும்...? இங்குள்ள வசதி வாய்ப்புகளின் அடிப்படையில் எல்லோரும் சென்னைக்கு வந்துதான் ஆக வேண்டும். எல்லோருடைய பொருளாதாரமும் மீண்டும் இயல்புக்கு வர கொஞ்சம் காலமாகும்.

கே: புலம்பெயர் மக்களின் பாதிப்புகளை முன்னமே கணித்து, தவிர்த்திருக்க முடியாதா?

ப: இப்படியொரு இழப்பை யாரும் சந்தித்தது இல்லை.மேலும், இழப்பு என்பது இதுவரை தனித்தனியாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது அது மொத்தமாக எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு கூட இழப்பு ஏற்படுகிறது, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள் என்று காலம் காலமாக கத்தியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது யாருடைய பிரச்சனையோ என்று அவர்கள் பாட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.

இப்போது, இ.எம்.ஐ கட்டுவதற்கு சிக்கல் வந்தவுடன் எல்லோரும் நின்று கவனிக்கிறார்கள். ஏனெனில், இது எல்லோருக்குமான பிரச்சனை. அரசாலும் இவ்வளவு மக்களுக்கு உடனடியாக எதுவும் செய்துவிட முடியாது. ஒன்றே ஒன்றை செய்திருக்கலாம், ஊரடங்கை இன்னும் கொஞ்சம் சரியாக திட்டமிட்டு இருக்கலாம்.

கே: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்து உள்ளாரே...?

ப: எதுவுமே இல்லாத நிலையில், இதையாவது கொடுக்க அரசு முன்வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள 116 மாவட்டங்களில் 25 வகையான தொழில்களில் அவர்களை ஈடுபடுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு நல்ல முயற்சி. ஆனால், எப்படி செயல்படுத்தப் படுகிறது என்பதை பொறுத்தே இந்த திட்டத்தின் பலனை தெரிந்து கொள்ள முடியும்.

சீர்திருத்தம் என்றால் நல்லது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சீர்திருத்தம் என்று சொல்லிவிட்டு வேட்டியை உருவினால் என்ன செய்வது...? அது சீர்திருத்தமா இல்லையா என்பதை உருவும் போது தான் தெரியும்.
50 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஏதோ ஒரு பெயரை வைத்து, சிலவற்றை அறிவித்து உள்ளார்கள். நடைமுறைப் படுத்தும் போது தான் இதன் சாதக, பாதகங்கள் தெரிய வரும்.

கே: ஏற்கனவே பல பொருளாதார சிக்கல்களை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், இதுவும் சேர்ந்து என்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

எதுவுமே தெரியாது. இது எங்கே போய் முடியும் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. ஏதோ ஒரு பயணம், போய்க் கொண்டிருக்கிறோம். இது முடிந்தவுடன் தான் எங்கு நிற்கிறோம் என்பது தெரியவரும். மூன்று நாட்களில் எல்லாம் முடிந்து விடும் என்றார் முதலமைச்சர். ஆனால், இப்போது 5 கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது எவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இது முடியும்போது தான் தெரியும்.

 
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading