மாஸ்க் அணியவில்லை என கூறி சட்டக்கல்லூரி மாணவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதோடு அவரின் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார். நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீஇமிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு ரஹீம் தான் முகக்கவசம் அணிந்து வந்ததால் அபராதம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
காவல்நிலையத்தில் போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் அளித்துள்ள புகார் மனுவில், சம்பவத்தின்போது தான் முகக்கவசம் அணிந்து வந்ததாகவும் எனினும் அபராதம் கட்ட போலீசார் வற்புறுத்தியதாகவும் தனது வேலைஅடையாள அட்டையை காண்பித்தும் விடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சமூக மோதலில் முடிந்த செல்ஃபி மோகம்..போலீஸ் குவிப்பு
மேலும், தன்னை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் தனது முகத்தில் சிறுநீர் கழித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில், மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவர் அப்துர் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் தாக்கி,முகத்தில் சிறுநீர்கழித்து ரவுடித்தனம். ரவுடிகளை பிடிக்கச்சொன்னால் மாணவர்களை சித்ரவதை செய்வதா? ரவுடித்தனம் செய்த போலீசார் இடமாற்றம் ஏமாற்றுவேலை!பணிநீக்கம் செய்க!உடனே மாணவரை விடுதலை செய்க!’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: முழு ஊரடங்கு: கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் மது பிரியர்கள்... போலீசார் திணறல்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.