நகைச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக புகார் - கே.எஃப்.ஜே அதிபர் சிக்குவாரா?

நகை சீட்டு போட்டு ரூ.10 கோடி மோசடி செய்த விவகாரத்தில் கேஎப்ஜே நகைக்கடை அதிபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 7:57 PM IST
  • Share this:
சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் என பல இடங்களில் கிளைகளைக் கொண்ட கே.எப்.ஜே. நகைக்கடை, நகை சேமிப்புத் திட்டத்தில் தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக புகார்கள் அளிக்கப்பட்டது. 8 மாதமாக உரிமையாளரை கைது செய்து பணத்தை மீட்டுத்தராததால் மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த டி.சி.செரியன் என்பவர் கேரளா பேஷன் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் 1973ம் ஆண்டு மயிலாப்பூரில் முதல் ஷோரூமைத் திறந்தார். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளின் வரிசையில் இடம் பெற்ற கேஎப்ஜே வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சென்னையில் அண்ணாநகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் என பல இடங்களில் கே.எப்.ஜேயின் கிளைகள் திறக்கப்பட்டன

எல்லா நகைக்கடைகளையும் போலவே, 2014ம் ஆண்டு கேஎப்ஜேயிலும் நகை சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் மாதம் தோறும் தங்களால் முடிந்த பணத்தை சீட்டு கட்டுவது போல கே.எப்.ஜேயில் செலுத்தினால் குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு நகை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பழைய நகைகளைக் கொடுத்து விட்டு புதிய நகைகளை வாங்கிக் கொள்ளும் கேஎப்ஜேயின் திட்டம் பெரும் வரவேற்பையும் பெற்றது


நகைகளை மொத்தமாக ரொக்கம் கொடுத்து வாங்க முடியாத நடுத்தர வர்க்க மக்கள் கேஎப்ஜேயின் திட்டங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடை விளம்பரச் செலவுகளில் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பங்குதாரர்களில் ஒருவரான சுனில் செரியன் கடந்த ஆண்டு கைதானார். தொடர்ந்து நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நகைகள் கொடுப்பதில் இழுத்தடிக்கத் தொடங்கினர்.

சில மாதங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து விடுவதாக உரிமையாளர் சுனில் செரியன் வாக்குறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அறிவித்தபடி எதுவும் நடக்காதததால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 8 மாதத்திற்கு முன்னர் புகாரளித்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 1,500 பேர் கொடுத்த புகாரில் ரூபாய் 10 கோடி வரை மோசடி செய்துள்ளதாக காவல் துறையின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை பணம் திரும்பக் கிடைக்காததால் தலைமறைவாக உள்ள கடையின் உரிமையாளர் சுனில் செரியனை கண்டுப்பிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க பலர் வந்திருந்தினர்.இதையடுத்து காவல் ஆணையரக போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி புகாரை பெற்றனர். விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை அடுத்து புகார் அளிக்கச் சென்றவர்கள் நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading